பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

முருக நாயனார் புராணம்
வ.எண் பாடல்
001

தாது சூழும் குழல் மலையாள் தளிர்க்கை சூழும் திருமேனி
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி
சோதி சூழும் மணி மௌலிச் சோழர் பொன்னித் திரு நாட்டுப்
போது சூழும் தடம் சோலைப் பொய்கை சூழும் பூம் புகலூர்.

002

நாம மூதூர் மற்று அதனுள், நல்லோர் மனம் போல் அவர் அணிந்த
சேமம் நிலவு திரு நீற்றின் சிறந்த வெண்மைத் திருந்து ஒளியால்,
யாம இருளும் வெளி ஆக்கும்; இரவே அல்ல, விரை மலர் மேல்
காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும் ஆல்.

003

நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய
வண்ண மதுரத் தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல;
தண் என் சோலை எம் மருங்கும் சாரும் மடமென் சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழும் தேன் பொழியும் ஆல்.

004

வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல;
அண்டர் பெருமான் திருப் பாட்டின் அமுதம் பெருகச் செவி மடுக்கும்
தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்பும் ஆல்.

005

ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது தன்னில்,
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர்
ஞான வரம்பின் தலை நின்றார்; நாகம் புனை வார் சேவடிக் கீழ்
ஊனம் இன்றி நிறை அன்பால் உருகும் மனத்தார் முருகனார்.

006

அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள்
மடை மேல் உகளும் திருப்புகலூர் மன்னி வாழும் தன்மையராய்,
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மைத் தவத்தால் அவர் கற்றைச்
சடை மேல் அணியத் திருப் பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவார்.

007

புலரும் பொழுதின் முன் எழுந்து, புனித நீரில் மூழ்கிப் போய்,
மலரும் செவ்வித் தம் பெருமான் முடிமேல் வான் நீர் ஆறுமதி
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த
அலகுஇல் மலர்கள் வெவ் வேறு திருப்பூங் கூடைகளில் அமைப்பார்.

008

கோட்டு மலரும் நில மலரும் குளிர்நீர் மலரும் கொழும் கொடியின்
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலரும் திருவாயில்
காட்டு முறுவல் நிலவு அலரக் கனக வரையின் பன்னக நாண்
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து.

009

கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும்
இண்டைச் சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும்
தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும்
நுண்தாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து, நுடங்கும் நூல் மார்பர்.

010

ஆங்கு அப் பணிகள் ஆன வற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்துத்
தாங்கிக் கொடு சென்று, அன்பினொடும் சாத்தி, வாய்ந்த அர்ச்சனைகள்
பாங்கில் புரிந்து பரிந்து உள்ளார்; பரமர் பதிகப் பற்று ஆன
ஓங்கிச் சிறந்த அஞ்சு எழுத்தும் ஓவா நாவின் உணர்வினார்.

011

தள்ளும் முறைமை ஒழிந்திட இத் தகுதி ஒழுகும் மறையவர் தாம்
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம் பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலைப்பால் உடன் உண்ட
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார்.

012

அன்ன வடிவும் ஏனமும் ஆய் அறிவான் இருவர் அறியாமல்
மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான ஈச்சுரத்து,
நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்சு எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார்.

013

அங்கண் அமரும் திரு முருகர் அழகுஆர் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின், முன் செய்த பூசை அதனால் புக்கு அருளிச்
செங்கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்கத்
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார்.

014

அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து, அவர் தம் கழல் நிழல் கீழ்
விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் தொண்டின் திறம் போற்றிக்
கரவு இலவர் பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு
பரவும் அன்பர் பசு பதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன்.