பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

குயில் பத்து
வ.எண் பாடல்
1

கீதம் இனிய குயிலே! கேட்டியேல், எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின், பாதாளம் ஏழினுக்கு அப்பால்;
சோதி மணி முடி சொல்லின், சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான்; அந்தம் இலான்; வரக் கூவாய்!

2

ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த, எவ் உருவும் தன் உரு ஆய்,
ஆர்கலி சூழ் தென் இலங்கை, அழகு அமர் வண்டோதரிக்கு,
பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை;
சீரிய வாயால், குயிலே! தென் பாண்டி நாடனை; கூவாய்!

3

நீல உருவின் குயிலே! நீள் மணி மாடம் நிலாவும்
கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில்,
சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை,
ஞாலம் விளங்க இருந்த நாயகனை, வரக் கூவாய்!

4

தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ,
வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;
ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;
மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை; நீ வரக் கூவாய்!

5

சுந்தரத்து இன்பக் குயிலே! சூழ் சுடர் ஞாயிறு போல,
அந்தரத்தே நின்று இழிந்து, இங்கு, அடியவர் ஆசை அறுப்பான்;
முந்தும், நடுவும், முடிவும், ஆகிய மூவர் அறியாச்
சிந்துரச் சேவடியானை; சேவகனை; வரக் கூவாய்!

6

இன்பம் தருவன்; குயிலே! ஏழ் உலகும் முழுது ஆளி;
அன்பன்; அமுது அளித்து ஊறும் ஆனந்தன்; வான் வந்த தேவன்;
நன் பொன் மணிச் சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானை;
கொம்பின் மிழற்றும் குயிலே! கோகழி நாதனை; கூவாய்!

7

உன்னை உகப்பன்; குயிலே! உன் துணைத் தோழியும் ஆவன்,
பொன்னை அழித்த நல் மேனிப் புகழின் திகழும் அழகன்,
மன்னன், பரிமிசை வந்த வள்ளல், பெருந்துறை மேய
தென்னவன், சேரலன், சோழன், சீர்ப் புயங்கன், வரக் கூவாய்!

8

வா, இங்கே, நீ, குயில் பிள்ளாய்! மாலொடு நான்முகன் தேடி,
ஓவி, அவர் உன்னிநிற்ப, ஒண் தழல் விண் பிளந்து ஓங்கி,
மேவி, அன்று, அண்டம் கடந்து, விரி சுடர் ஆய், நின்ற மெய்யன்;
தாவி வரும் பரிப் பாகன்; தாழ் சடையோன்; வரக் கூவாய்!

9

கார் உடைப் பொன் திகழ் மேனி, கடி பொழில் வாழும், குயிலே!
சீர் உடைச் செம் கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன்;
பாரிடைப் பாதங்கள் காட்டி, பாசம் அறுத்து, எனை ஆண்ட
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை; நீ, வரக் கூவாய்!

10

கொந்து அணவும் பொழில் சோலைக் கூம் குயிலே! இது கேள் நீ;
அந்தணன் ஆகி வந்து, இங்கே, அழகிய சேவடி காட்டி,
எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும்,
செம் தழல் போல் திருமேனித் தேவர் பிரான், வரக் கூவாய்!