பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம் ஆய், அந்தரமே திரிந்து போய், அரு நரகில் வீழ்வேனைச் சிந்தை தனைத் தெளிவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லைக் கண்டேனே!
வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு, தனைச் சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை, எனைப் பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த இணை இலியை அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே!
உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி, கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே!
கல்லாத, புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை, வல்லாளன் ஆய் வந்து, வனப்பு எய்தி இருக்கும்வண்ணம், பல்லோரும் காண, என்தன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே!
சாதி, குலம், பிறப்பு, என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேனை, அல்லல் அறுத்து; ஆட்கொண்டு; பேதை குணம், பிறர் உருவம், யான், எனது, என் உரை, மாய்த்து; கோது இல் அமுது ஆனானை குலாவு தில்லைக் கண்டேனே!
பிறவி தனை அற மாற்றி; பிணி, மூப்பு, என்ற இவை இரண்டும், உறவினொடும், ஒழியச் சென்று; உலகு உடைய ஒரு முதலை செறி பொழில் சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி, மறையவரும், வானவரும், வணங்கிட நான் கண்டேனே!
பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளி, பித்தன் இவன் என, என்னை ஆக்குவித்து, பேராமே, சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே!
அளவு இலாப் பாவகத்தால் அமுக்கு உண்டு, இங்கு, அறிவு இன்றி, விளைவு ஒன்றும் அறியாதே, வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவு இலா ஆனந்தம் அளித்து, என்னை ஆண்டானை களவு இலா வானவரும் தொழும் தில்லைக் கண்டேனே!
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை, ஓங்கி, உளத்து, ஒளி வளர; உலப்பு இலா அன்பு அருளி; வாங்கி, வினை; மலம் அறுத்து; வான் கருணை தந்தானை நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே!
பூதங்கள் ஐந்து ஆகி, புலன் ஆகி, பொறி ஆகி, பேதங்கள் அனைத்தும் ஆய், பேதம் இலாப் பெருமையனை, கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை, மரகதத்தை வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே!