பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பைந் நாப் பட அரவு ஏர் அல்குல் உமை பாகம் அது ஆய், என் மெய்ந் நாள்தொறும் பிரியா, வினைக் கேடா! விடைப் பாகா! செம் நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்! எந் நாள் களித்து, எந் நாள் இறுமாக்கேன், இனி, யானே?
நான் ஆர், அடி அணைவான்? ஒரு நாய்க்குத் தவிசு இட்டு, இங்கு, ஊன் ஆர் உடல் புகுந்தான்; உயிர் கலந்தான்; உளம் பிரியான்; தேன் ஆர் சடை முடியான்; மன்னு திருப்பெருந்துறை உறைவான்; வானோர்களும் அறியாதது ஒர் வளம் ஈந்தனன், எனக்கே.
எனை, நான் என்பது அறியேன்; பகல், இரவு, ஆவதும் அறியேன்; மன வாசகம் கடந்தான் எனை மத்த உன்மத்தன் ஆக்கி; சின மால் விடை உடையான், மன்னு திருப்பெருந்துறை உறையும் பனவன், எனைச் செய்த படிறு அறியேன்; பரம் சுடரே!
வினைக்கேடரும் உளரோ பிறர், சொல்லீர்? வியன் உலகில் எனை, தான் புகுந்து, ஆண்டான்; எனது என்பின் புரை உருக்கி, பினை, தான் புகுந்து, எல்லே! பெருந்துறையில் உறை பெம்மான், மனத்தான்; கண்ணின் அகத்தான்; மறு மாற்றத்திடையானே!
பற்று ஆங்கு அவை அற்றீர், பற்றும் பற்று ஆங்கு அது பற்றி, நற்று ஆம் கதி அடைவோம் எனின், கெடுவீர், ஓடி வம்மின்; தெற்று ஆர் சடைமுடியான், மன்னு திருப்பெருந்துறை இறை, சீர் கற்று ஆங்கு, அவன் கழல் பேணினரொடும் கூடுமின், கலந்தே!
கடலின் திரை அது போல் வரு கலக்கம், மலம், அறுத்து; என் உடலும், எனது உயிரும், புகுந்து; ஒழியாவணம், நிறைந்தான்: சுடரும் சுடர் மதி சூடிய, திருப்பெருந்துறை உறையும், படரும் சடை மகுடத்து, எங்கள் பரன் தான் செய்த படிறே!
வேண்டேன் புகழ்; வேண்டேன் செல்வம்; வேண்டேன் மண்ணும், விண்ணும்; வேண்டேன் பிறப்பு, இறப்பு; சிவம் வேண்டார் தமை நாளும் தீண்டேன்; சென்று, சேர்ந்தேன், மன்னு திருப்பெருந்துறை; இறை தாள் பூண்டேன்; புறம் போகேன்; இனி, புறம்போகல் ஒட்டேனே!
கோல்தேன் எனக்கு என்கோகுரை கடல்வாய் அமுது என்கோ ஆற்றேன்; எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அரசே! சேற்று ஆர் வயல் புடை சூழ்தரு திருப்பெருந்துறை உறையும், நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே! உனை யானே?
எச்சம் அறிவேன் நான்; எனக்கு இருக்கின்றதை அறியேன்; அச்சோ! எங்கள் அரனே! அரு மருந்தே! எனது அமுதே! செச்சை மலர் புரை மேனியன், திருப்பெருந்துறை உறைவான், நிச்சம் என நெஞ்சில் மன்னி, யான் ஆகி நின்றானே!
வான் பாவிய உலகத்தவர் தவமே செய, அவமே, ஊன் பாவிய உடலைச் சுமந்து, அடவி மரம் ஆனேன்; தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்! நான் பாவியன் ஆனால், உனை நல்காய் எனல் ஆமே?