பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருச்சதகம் - கைம்மாறு கொடுத்தல்
வ.எண் பாடல்
1

இரு கை யானையை ஒத்து இருந்து, என் உளக்
கருவை யான் கண்டிலேன்; கண்டது எவ்வமே;
வருக என்று பணித்தனை; வான் உளோர்க்கு
ஒருவனே! கிற்றிலேன்; கிற்பன், உண்ணவே.

2

உண்டு ஓர் ஒள் பொருள் என்று உணர்வார்க்கு எலாம்
பெண்டிர், ஆண், அலி, என்று அறி ஒண்கிலை;
தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்;
கண்டும் கண்டிலேன்: என்ன கண் மாயமே!

3

மேலை வானவரும் அறியாதது ஓர்
கோலமே, எனை ஆட்கொண்ட கூத்தனே,
ஞாலமே, விசும்பே, இவை வந்து போம்
காலமே! உனை என்று கொல் காண்பதே?

4

காணல் ஆம் பரமே, கட்கு இறந்தது ஓர்
வாள் நிலாப் பொருளே, இங்கு, ஒர் பார்ப்பு என,
பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, உனைப்
பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே.

5

போற்றி என்றும், புரண்டும், புகழ்ந்தும் நின்று,
ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்;
ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும்
கூற்றம் அன்னது ஓர் கொள்கை என் கொள்கையே.

6

கொள்ளும்கில், எனை அன்பரில் கூய்ப் பணி
கள்ளும், வண்டும், அறா மலர்க் கொன்றையான்;
நள்ளும், கீழ் உளும், மேல் உளும், யா உளும்,
எள்ளும் எண்ணெயும் போல், நின்ற எந்தையே?

7

எந்தை, யாய், எம்பிரான்; மற்றும் யாவர்க்கும்
தந்தை, தாய், தம்பிரான்; தனக்கு அஃது இலான்;
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவு அரும் செல்வனே.

8

செல்வம், நல்குரவு, இன்றி; விண்ணோர், புழு,
புல் வரம்பு இன்றி; யார்க்கும் அரும் பொருள்
எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன்:
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே!

9

கட்டு அறுத்து, எனை ஆண்டு, கண் ஆர, நீறு
இட்ட அன்பரொடு, யாவரும் காணவே,
பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை
எட்டினோடு இரண்டும் அறியேனையே.

10

அறிவனே! அமுதே! அடி நாயினேன்
அறிவன் ஆகக் கொண்டோ, எனை ஆண்டதும்?
அறிவு இலாமை அன்றே கண்டது, ஆண்ட நாள்?
அறிவனோ, அல்லனோ? அருள், ஈசனே!