இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி, பூதம் இசை பாட, இடு பிச்சைக்கு எச்சு உச்சம் போது,
பல அகம் புக்கு, உழிதர்வீர்; பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ?
உலவு திரைக் கடல் நஞ்சை, அன்று, அமரர் வேண்ட உண்டு அருளிச் செய்தது, உமக்கு இருக்க ஒண்ணாது இடவே;
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வக் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .