பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி, திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது மருவிய சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள், நிலை மலி சுரர் முதல் உலகுகள், நிலை பெறு வகை நினைவொடு மிகும் அலை கடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திரு மகளொடு திகழ்வரே.
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள், மலி குழுவிய சுரர், பிறர், மனிதர்கள், குலம் மலிதரும் உயிர் அவை அவை முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி செழு மணி அணி சிவபுரநகர் தொழுமவர் புகழ் மிகும், உலகிலே.
நறை மலிதரும் அளறொடு, முகை, நகு மலர், புகை, மிகு வளர் ஒளி, நிறை புனல் கொடு, தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர் குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே.
சினம் மலி அறுபகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர் தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே.
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு உரு இயல் உலகு அவை புகழ்தர, வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி அருதவம் முயல்பவர், தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி, திரு வளர் சிவபுரம், நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே.
கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என, மதம் மிகு நெடுமுகன் அமர் வளைமதி திகழ் எயிறு அதன் நுதிமிசை, இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழி பட, அருள் செய்த பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர், படியிலே.
அசைவு உறு தவ முயல்வினில், அயன் அருளினில், வரு வலிகொடு சிவன் இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய நிசிசரன் முடி உடை தர, ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே.
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு சுடர் உருவொடு நிகழ் தர, அவர் வெருவொடு துதி அது செய, எதிர் விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர் திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே.
"குணம் அறிவுகள் நிலை இல, பொருள் உரை மருவிய பொருள்களும் இல, திணம்" எனுமவரொடு, செதுமதி மிகு சமணரும், மலி தமது கை உணல் உடையவர், உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே.
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒருபதும் நவில்பவர், நிகழ் குலம், நிலம், நிறை திரு, உரு, நிகர் இல கொடை, மிகு சய மகள்; புகழ், புவி வளர் வழி, அடிமையின் மிகை புணர் தர, நலம் மிகுவரே.
இன்குரல் இசை கெழும் யாழ் முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர் பொன் கரை பொரு பழங்காவிரியின் தென் கரை மருவிய சிவபுரமே.
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப் பொன்றிட உதை செய்த புனிதன் நகர் வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள் சென்று அடி வீழ்தரு சிவபுரமே.
மலைமகள் மறுகிட, மதகரியைக் கொலை மல்க உரிசெய்த குழகன் நகர் அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே சிலை மல்கு மதில் அணி சிவபுரமே
மண், புனல், அனலொடு, மாருதமும், விண், புனை மருவிய விகிர்தன் நகர் பண் புனை குரல்வழி வண்டு கெண்டிச் செண்பகம் அலர் பொழில் சிவபுரமே.
வீறு நன்கு உடையவள் மேனி பாகம் கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்- நாறு நன் குர விரி வண்டு கெண்டித் தேறல் உண்டு எழுதரு சிவபுரமே.
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து, நீறு அது ஆக்கிய நிமலன் நகர் நாறு உடை நடுபவர் உழவரொடும் சேறு உடை வயல் அணி சிவபுரமே.
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்- வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்- சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.
எழில் மலை எடுத்த வல் இராவணன் தன் முழுவலி அடக்கிய முதல்வன் நகர் விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து, செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே.
சங்கு அளவிய கையன், சதுர்முகனும், அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்- கங்குலும் பறவைகள் கமுகுதொறும் செங்கனி நுகர்தரு சிவபுரமே.
மண்டையின், குண்டிகை, மாசு தரும், மிண்டரை விலக்கிய விமலன் நகர்- பண்டு அமர்தரு பழங்காவிரியின் தெண்திரை பொருது எழு சிவபுரமே.
சிவன் உறைதரு, சிவபுரநகரைக் கவுணியர் குலபதி காழியர்கோன்- தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார் நவமொடு சிவகதி நண்ணுவரே.
கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன், முலை மலிதரு திரு உருவம் அது உடையவன், சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ, இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே.
படர் ஒளி சடையினன், விடையினன், மதில் அவை சுடர் எரி கொளுவிய சிவன் அவன், உறை பதி திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய, நம் இடர் கெடும்; உயர்கதி பெறுவது திடனே.
வரை திரிதர, அரவு அகடு அழல் எழ, வரு நுரை தரு கடல் விடம் நுகர்பவன்-எழில் திகழ் திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம் உரை தரும் அடியவர் உயர்கதியினரே.
துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடு பிணி அடைவு இலர்; பிறவியும் அற விசிறுவர் திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய மணிமிடறனது அடி இணை தொழுமவரே.
மறையவன், மதியவன், மலையவன், நிலையவன், நிறையவன், உமையவள் மகிழ் நடம் நவில்பவன், இறையவன்-இமையவர் பணிகொடு சிவபுரம் உறைவு என உடையவன், எமை உடையவனே.
முதிர் சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து, அதிர்கழல் ஒலிசெய, அருநடம் நவில்பவன்; எதிர்பவர் புரம் எய்த இணை இலி; அணை பதி சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே.
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர் பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன், செடி படு பலி திரி சிவன், உறை சிவபுரம் அடைதரும் அடியவர் அருவினை இலரே.
கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன் உரம் நெரிதர, வரை அடர்வு செய்தவன், உறை பரன் என அடியவர் பணிதரு, சிவபுர- நகர் அது புகுதல் நம் உயர்கதி அதுவே.
“அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர் சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்” என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர் ஒன்று இலர்; புகழொடும் உடையர், இவ் உலகே.
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை வித்தகம் ஒழிகில; விடை உடை அடிகள் தம் இத் தவம் முயல்வு உறில், இறைவன சிவபுரம் மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்- பந்தன தமிழ்கொடு, சிவபுரநகர் உறை எந்தையை உரைசெய்த இசை மொழிபவர், வினை சிந்தி முன் உற, உயர்கதி பெறுவர்களே.