பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவையாறு
வ.எண் பாடல்
1

கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.

2

தன்மை யாரும் அறிவார் இலை; தாம் பிறர் எள்கவே,
பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்;
துன்னஆடை உடுப்பர்; சுடலைப் பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே.

3

கூறு பெண்; உடை கோவணம்; உண்பது வெண்தலை;
மாறில், ஆரும் கொள்வார் இலை, மார்பில் அணிகலம்;
ஏறும் ஏறித் திரிவர்; இமையோர் தொழுது ஏத்தவே
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

4

பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர்வாயினார்,
எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற
கண்ணினார்,
வண்ணம் பாடி, வலி பாடி, தம் வாய்மொழி பாடவே,
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

5

வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே,
வானை ஊடுஅறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேன், நெய், பால், தயிர், தெங்குஇளநீர், கரும்பின் தெளி,
ஆன் அஞ்சு, ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே.

6

எங்கும் ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும், மதி சூடு மைந்தனும்,
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும் ஆய்
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.

7

ஓதி யாரும் அறிவார் இலை; ஓதி உலகுஎலாம்
சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்;
வேதிஆகி, விண் ஆகி, மண்ணோடு எரி காற்றும் ஆய்,
ஆதிஆகி, நின்றானும் ஐயாறு உடை ஐயனே.

8

குரவநாள்மலர்கொண்டு அடியார் வழிபாடுசெய்,
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே.
பரவி நாள்தொறும் பாட, நம் பாவம் பறைதலால்,
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

9

உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்;
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்;
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே.

10

மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்;
கோலம் ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே.

11

கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;
மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல்
வாழ்த்தவே.
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே.

12

பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை,
கலி கடிந்த கையான் கடல்காழியர்காவலன்,
ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள்,
போய்
மலி கொள் விண் இடை மன்னிய சீர் பெறுவார்களே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவையாறு
வ.எண் பாடல்
1

திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,
உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே
விருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் ஏர் ஆர்
மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே.

2

கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர்
இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும்
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார,
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே.

3

கட்டு வடம் எட்டும் உறு வட்டமுழவத்தில்
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு
இட்டம் மிக, நட்டம் அவை இட்டவர் இடம் சீர்
வட்டமதிலுள் திகழும் வண் திரு ஐயாறே.

4

நண்ணி ஒர் வடத்தின்நிழல் நால்வர்முனிவர்க்கு, அன்று,
எண் இலிமறைப்பொருள் விரித்தவர் இடம் சீர்த்
தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி
மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே.

5

வென்றி மிகு தாருகனது ஆர் உயிர் மடங்க,
கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ,
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர்மேலால்
மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே.

6

பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி,
பாத முதல் பைஅரவு கொண்டு அணி பெறுத்தி,
கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ
மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே.

7

துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு எய்த,
பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும், அங்கே,
"என்ன சதி?" என்று உரைசெய் அங்கணன் இடம் சீர்
மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே.

8

இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம்போர்
அரக்கன் முடிபத்து அலை புயத்தொடும் அடங்கத்
துரக்க, விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர்
வரக் கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே.

9

பருத்துஉருஅது ஆகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப்
பெருத்த உருஅது ஆய் உலகு இடந்தவனும், என்றும்
கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார்
வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே.

10

பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர், புத்தர்
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம்,
நோக்கரிய தத்துவன் இடம் படியின்மேலால்
மாகம் உற நீடு பொழில் வண் திரு ஐயாறே.

11

வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள்
ஈசனை, எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப்
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்,
நேசம் மலி பத்தர் அவர், நின்மலன் அடிக்கே.