பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஅரதைப்பெரும்பாழி
வ.எண் பாடல்
1

பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பாய் புலி,
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டு இடை,
நித்தம் ஆக(ந்) நடம் ஆடி, வெண் நீறு அணி
பித்தர் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

2

கயல சேல கருங்கண்ணியர் நாள்தொறும்
பயலை கொள்ள, பலி தேர்ந்து உழல் பான்மையார்
இயலை, வானோர் நினைந்தோர்களுக்கு, எண்ண(அ)ரும்
பெயரர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

3

கோடல் சால(வ்) உடையார், கொலை யானையின்
மூடல் சால(வ்) உடையார், முளி கான் இடை
ஆடல் சால(வ்) உடையார், அழகு ஆகிய
பீடர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

4

மண்ணர், நீரார், அழலார், மலி காலினார்
விண்ணர், வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள
பண்ணர், பாடல் உடையார், ஒருபாகமும்
பெண்ணர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

5

மறையர், வாயின் மொழி; மானொடு, வெண்மழு,
கறைகொள் சூலம்(ம்), உடைக் கையர்; கார் ஆர்தரும்
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னிமேல்
பிறையர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

6

புற்று அரவம், புலித்தோல், அரைக் கோவணம்,
தற்று, இரவில் நடம் ஆடுவர்; தாழ்தரு
சுற்று அமர் பாரிடம், தொல்கொடியின்மிசைப்
பெற்றர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

7

துணை இல் துத்தம், சுரிசங்கு, அமர் வெண்பொடி
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும்(ம்), எரி-
கணையினால் முப்புரம் செற்றவர், கையினில்
பிணையர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

8

சரிவு இலா வல் அரக்கன் தடந்தோள் தலை
நெரிவில் ஆர(வ்) அடர்த்தார், நெறி மென்குழல்
அரிவை பாகம் அமர்ந்தார், அடியாரொடும்
பிரிவு இல் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

9

வரி அரா என்பு அணி மார்பினர், நீர் மல்கும்
எரி அராவும் சடைமேல் பிறை ஏற்றவர்,
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய
பெரியர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

10

நாண் இலாத சமண் சாக்கியர் நாள்தொறும்
ஏண் இலாத(ம்) மொழிய(வ்), எழில் ஆயவர்;
சேண் உலாம் மும்மதில் தீ எழச் செற்றவர்
பேணு கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

11

“நீரின் ஆர் புன்சடை நிமலனுக்கு இடம்” என,
பாரினார் பரவு அரதைப் பெரும்பாழியை,
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.