பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ, விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும் கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின் அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?
நுண் இடைப் பேர் அல்குல் நூபுர மெல் அடிப் பெண்ணின் நல்லாளை ஓர் பாகமாப் பேணினான், கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர் விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே.
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம் காவிவாய்ப் பண் செயும் கானப்பேர் அண்ணலை, நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர் தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே.
நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும், பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும், கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர் குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே.
ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு, ஈறு இலா ஞானப் பேர் ஆயிரம் பேரினான், நண்ணிய கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.
பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த நீர் வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்- கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே.
மான மா மடப்பிடி வன் கையால் அலகு இடக் கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர், ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின், ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த திண்- தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார் நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே.
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன், நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான், கலையின் ஆர் புறவில்-தேன் கமழ் தரு கானப்பேர் தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து, உச்சி பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள் மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே.
காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர் கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்- நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன் பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.