பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருச்செம்பொன்பள்ளி
வ.எண் பாடல்
1

கான் அறாத கடி பொழில் வண்டு இனம்
தேன் அறாத திருச் செம்பொன் பள்ளியான்,
ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி-
தான் அறாதது ஓர் கொள்கையன்; காண்மினே!

2

என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு
அன்பும் ஆயிடும் ஆயிழையீர்! இனிச்
செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை
நம் பொன்பள்ளி உள்க(வ்), வினை நாசமே.

3

வேறு கோலத்தர்; ஆண் அலர்; பெண் அலர்;
கீறு கோவண ஐ துகில் ஆடையர்;
தேறல் ஆவது ஒன்று அன்று, செம்பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே.

4

அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து
இருவராய், இடுவார் கடை தேடுவார்,
தெரு எலாம் உழல்வார்-செம்பொன்பள்ளியார்;
ஒருவர் தாம் பலபேர் உளர்; காண்மினே!

5

பூ உலாம் சடைமேல் புனல் சூடினான்,
ஏவலால் எயில்மூன்றும் எரித்தவன்-
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்;
மூவராய் முதல் ஆய் நின்ற மூர்த்தியே.

6

சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக்
கலவர் ஆவதன் காரணம் என்கொலோ-
திலக நீள் முடியார், செம்பொன்பள்ளியார்,
குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே.?

7

கை கொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர்,
மை கொள் கண்டத்தர் ஆகி இருசுடர்
செய்யமேனி வெண் நீற்றர்-செம்பொன்பள்ளி
ஐயர்; கையது, ஓர் ஐந்தலைநாகமே.

8

வெங் கண் நாகம் வெரு உற ஆர்த்தவர்,
பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர்,
செங்கண் மால்விடையார்-செம்பொன்பள்ளியார்;
அங்கண் ஆய் அடைந்தார் வினை தீர்ப்பரே.

9

நன்றி நாரணன், நான்முகன், என்று இவர்
நின்ற நீள் முடியோடு அடி காண்பு உற்றுச்
சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான்,
நின்ற சூழலில் நீள் எரி ஆகியே.

10

திரியும் மும்மதில் செங் கணை ஒன்றினால்
எரிய எய்து, அனல் ஓட்டி, இலங்கைக் கோன்
நெரிய ஊன்றியிட்டார்-செம்பொன்பள்ளியார்;
அரிய வானம் அவர் அருள்செய்வரே.