பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆக்கூர்த் தான்தோன்றிமாடம்
வ.எண் பாடல்
1

முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ
உலகும் தாம் ஆகி நின்றார் போலும்;
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்;
கல்லலகு பாணி பயின்றார் போலும்;
கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர்
குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்;
அடித்தாமரை மலர் மேல் வைத்தார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

2

ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்;
உணரப்படாதது ஒன்று இல்லை போலும்;
காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்;
கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்;
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்;
விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்;
ஆதிக்கு அளவு ஆகி நின்றார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

3

மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் போலும்; மணி
நீலகண்டம் உடையார் போலும்;
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும்; நீறு
ஏறு தோள் எட்டு உடையார் போலும்;
வை ஆர் மழுவாள் படையார் போலும்;
வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்;
ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

4

வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்;
வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்;
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங்
கங்கை தோய்ந்த சடையார் போலும்;
கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்;
கட்டங்கம் ஏந்திய கையார் போலும்;
அடி விளங்கு செம் பொன்கழலார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

5

ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு
வெண்தலை கலனா ஏந்தி, நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல்
ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்;
மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும்,
மதி பிறந்த விண்ணும், மண்ணும்,
ஆகாசம், என்று இவையும் ஆனார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

6

மாது ஊரும் வாள் நெடுங்கண், செவ்வாய், மென்தோள்,
மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்;
மூதூர், முதுதிரைகள், ஆனார் போலும்; முதலும்
இறுதியும் இல்லார் போலும்;
தீது ஊரா நல்வினை ஆய் நின்றார் போலும்; திசை
எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்;
ஆதிரைநாள் ஆய் அமர்ந்தார் போலும்-ஆக்கூரில்-தான்
தோன்றி அப்பனாரே.

7

மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்;
மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்;
கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்;
குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்;
காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம்
தம் இடமாக் கொண்டார் போலும்;
ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

8

கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்;
காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்;
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்;
ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்;
எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு
ஏறிச் செல்லும் இறைவர் போலும்;
அண்ணாவும், ஆரூரும், மேயார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

9

கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர்
போது, தாது அணிந்த கண்ணி போலும்;
நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல்
கண்டத்து, இறையார் போலும்;
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி
மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்;
அடியார் புகல் இடம் அது ஆனார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

10

திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து,
அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர்
ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்;
கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ
அன்ன கனலார் போலும்;
வரை ஆர் மதில் எய்த வண்ணர்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.