பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஆறாம் தந்திரம் / துறவு
வ.எண் பாடல்
1

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவம் கண்ட சோதிப் பிரானை
மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார் கட்கு
அறப்பதி காட்டும் அமரர் பிரானே.

2

பிறந்தும் இறந்தும் பல் பேதைமை யாலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர் பருவத்துத்
துறந்த உயிர்க்குச் சுடர் ஒளி ஆமே.

3

அறவன் பிறப்பு இலி யாரும் இலாதான்
உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே.

4

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியின் நெருஞ்சில் முள் பாய கிலாவே.

5

கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும்
நாடி வளைந்தது நான் கடவேன் அலேன்
ஆடல் விடை உடை அண்ணல் திருவடி
கூடும் தவம் செய்த கொள்கையான் தானே.

6

உழவன் உழ உழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்று இட்டு
உழவன் அதனை உழவு ஒழிந்தானே.

7

மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூற்றுவன்
நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா இலி
கார் துறந்தார்க்கு அவன் கண் நுதலாய் நிற்கும்
பார் துறந்தார்க்கே பதம் செயல் ஆமே.

8

நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது
போக முள் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து
ஏகப் படம் செய்து உடம்பு இடம் ஆமே.

9

அகன்றார் வழி முதல் ஆதிப் பிரானும்
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தாள் பலபல சீவனும் ஆகும்
நயன்றான் வரும் வழி நாம் அறியோமே.

10

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பல் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பு ஏறிநோக்கினன் மீகாமன் கூரையில்
கூம்பு ஏறிக் கோயிலில் பூக்கின்ற வாறே.