பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தொழில் அறிவாளர் சுருதி கண் ஆகப் பழுது அறியாத பரம குருவை வழி அறிவார் நல்வழி அறிவாளர் அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே.
பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர உதைத்து உடையாய் உகம் தாண்ட அருளாயே.
பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை விதைக் கின்ற வித்தினை மேல் நின்று நோக்கிச் சிதைக் கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி இசைக் கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே.
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக எள்ளத் தனையும் இடைவிடதே நின்று தெள்ளி அறியச் சிவ பதம் தானே.
சோதி விசாகம் தொடர்ந்து இரு தேள் நண்டு ஓதிய நாளே உணர்வது தான் என்று நீதியுள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது ஆதியும் ஏதும் அறிய கிலானே.
தொழில் ஆரம் ஆம் மணித் தூய்தான சிந்தை எழிலால் இறைவன் இடம் கொண்ட போதே விழலார் விறல் ஆம் வினை அது போகக் கழல் ஆர் திருவடி கண்ட அருள் ஆமே.
சாத்திகன் ஆய்ப் பர தத்துவம் தான் உன்னி ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே ஆர்த்த பிறவியின் அஞ்சி அற நெறி சாத்த வல்லான் அவன் சற் சீடன் ஆமே.
சத்தும் அசத்தும் எவ்வாறு எனந் தான் உன்னிச் சித்தை உறுக்கிச் சிவன் அருள் கை காட்டப் பத்தியின் ஞானம் பெறப் பணிந்தான் அந்தச் சத்தியில் இச்சைத் தகுவோன் சற் சீடனே.
அடி வைத்து அருளுதி ஆசான் நின்று உன்னா அடி வைத்த மா முடி மாயப் பிறவி அடி வைத்த காய அருள் சத்தி யாலே அடி பெற்ற ஞானத்தன் ஆசற்று உளோனே.
சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல வாராத காதல் குருபரன் பால் ஆகச் சாராத சாதக நான்கும் தன் பால் உற்றோன் ஆராயும் ஞானத்தன் ஆம் அடிவைக்கவே.
உணர்த்து மதி பக்குவர்க்கே உணர்த்தி இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டுக் குணக்கொடு தெற்குத் தர பச்சிமம் கொண்டு உணர்த்துமின் நாவுடையாள் தன்னை உன்னியே.
இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்திக் குறை அது கூறிக் குணம் கொண்டு போற்றச் சிறை உடல் நீ அறக் காட்டிச் சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே.
வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால் வாழ்க்கைப் புனல் வழி மாற்றிச் சித்தாந்தத்து வேட்கை விடும் மிக்க வேதாந்தி பாதமே தாழ்க்கும் தலையினோன் சற் சீடன் ஆமே.
சற்குணம் வாய்மை தயா விவேகம் தண்மை சற்குரு பாதமே சாயை போல் நீங்காமே சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல் அற்புதமே தோன்றல் ஆகும் சற் சீடனே.