பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
காலும் தலையும் அறியார் கலதிகள் கால் அந்தச் சத்தி அருள் என்பர் காரணம் பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர் கால் அந்த ஞானத்தைக் காட்ட வீடு ஆகும்.
தலைஅடி ஆவது அறியார் காயத்தில் தலை அடி உச்சியில் உள்ளது மூலம் தலை அடி ஆன அறிவை அறிந்தோர் தலை அடி ஆகவே தான் இருந்தாரே.
நின்றான் நிலம் முழுது அண்டமும் மேல் உற வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப் பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே.
சிந்தையின் உள்ளே எந்தை திருவடி சிந்தையும் எந்தை திருவடிக் கீழ் அது எந்தையும் என்னை அறியகிலன் ஆகில் எந்தையை யானும் அறிய கிலேனே.
பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து அப்பால் என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம் உன்னா ஒளியும் உரை செய்யா மந்திரம் சொன்னான் கழல் இணை சூடி நின்றேனே.
பதி அது தோற்றும் பதம் அது வைம்மின் மதி அது செய்து மலர்ப் பதம் ஓதும் நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன் கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே.
தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதி நாதன் கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை பரித்து நின்றான் அப் பரி பாகத்தானே.
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள் நன்றாகக் காய்ச்சிப் பதம் செய வல்லார்கட்கு இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே.
கால் கொண்டு என் சென்னியில் கட்டறக் கட்டற மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அறப் பால் கொண்ட என்னைப் பரன் கொள்ள நாடினான் மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே.
பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும் குற்றமும் கண்டு குணம் குறை செய்ய ஓர் பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றம் இலாச் செய்கைக்கு எய்தின செய்யுமே.