பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / சர்வ வியாபி
வ.எண் பாடல்
1

ஏயும் சிவ போகம் ஈது அன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனது எய்தும்
சாயும் தனது வியா பகம் தானே.

2

நான் அறிந்த அப் பொருள் நாட இடம் இல்லை
வான் அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறிந்து எங்கும் தலைப் படல் ஆமே.

3

கடல் இடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடல் இடை வாழ்வு கொண்டு உள் ஒளி நாடி
உடல் இடை வைகின்ற உள் உறு தேவனைக்
கடலின் மலி திரைக் காணலும் ஆமே.

4

பெரும் சுடர் மூன்றினும் உள் ஒளி ஆகித்
தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும்
இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம்
பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே.

5

உறுதியின் உள் வந்த உள் வினைப் பட்டு
இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும்
சிறுதியின் உள் ஒளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே.

6

பற்றின் உள்ளே பரம் ஆய பரம் சுடர்
முற்றினும் முற்றி முளைக் கின்ற மூன்று ஒளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலை தரு
மற்றவன் ஆய் நின்ற மாதவன் தானே.

7

தேவனும் ஆகும் திசை திசை பத்துளும்
ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும்
ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்று கின்றானே.

8

நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்கு உள
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு இலி
போக்கும் வரவும் புணர வல்லானே.

9

செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி
ஒழிந்தன வாயு ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன்
ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே.

10

புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்து நின்றானே.

11

விண்ணவன் ஆய் உலகு ஏழுக்கும் மேல் உளன்
மண்ணவன் ஆய் வலம் சூழ் கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆய் அது தன்மையின் நிற்பது ஓர்
கண்ணவன் ஆகிக் கலந்து நின்றானே.

12

நின்றனன் மாலொடு நான் முகன் தான் ஆகி
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என
நின்றனன் தான் நெடு மால் வரை ஏழ் கடல்
நின்றனன் தானே வளம் கனி ஆயே.

13

புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர் பெரும் பாகன்
அவனே அரும் பல சீவனும் ஆகும்
அவனே இறை என மால் உற்ற வாறே.

14

உள் நின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண் நின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண் நின்று இயங்கும் வாயுவும் ஆய் நிற்கும்
கண் நின்று இலங்கும் கருத்தவன் தானே.

15

எண்ணும் எழுத்தும் இனம் செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணில் கவரும் கருத்தில் அது இது
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே.

16

இருக்கின்ற எண் திசை அண்டம் பாதாளம்
உருக்கொடு தன் நடு ஓங்க இவ் வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்து இருந்தானே
திருக் கொன்றை வைத்த செழும் சடையானே.

17

பலவுடன் சென்ற அப் பார் முழுது ஈசன்
செலவு அறிவார் இல்லை சேயன் அணியன்
அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி
பல இலது ஆய் நிற்கும் பான்மை வல்லானே.

18

அது அறிவு ஆனவன் ஆதிப் புராணன்
எது அறியா வகை நின்றவன் ஈசன்
பொது அது ஆன புவனங்கள் எட்டும்
இது அறிவான் நந்தி எங்கள் பிரானே.

19

நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்பு உறு சோதியும் ஆய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை
ஊரும் சகலன் உலப்பு இலி தானே.