பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு தண் நின்ற தாளைத் தலைக் காவல் முன் வைத்து உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்தக் கண் நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே.
களிம்பு அறுத்தான் எங்கள் கண்நுதல் நந்தி களிம்பு அறுத்தான் அருள் கண் விழிப் பித்துக் களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டிப் பளிங்கில் பவளம் பதித்தான் பதியே.
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அனாதி பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம் பதி அணுகில் பசு பாசம் நில்லாவே.
வேயின் எழும் கனல் போலே இம் மெய் எனும் கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயா என்னும் தோயம் அதாய் எழும் சூரியன் ஆமே.
சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ் பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
மலம் களைந்தாம் என மாற்றி அருளித் தலம் களைந்தான் நல் சதா சிவம் ஆன புலம் களைந்தான் அப் பொதுவின் உள் நந்தி நலம் களைந்தான் உள் நயந்தான் அறிந்தே.
அறி ஐம்புலனுடன் நான்றது ஆகி நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல அறிவறி உள்ளே அழிந்தது போலக் குறி அறிவிப்பான் குருபரன் ஆமே.
ஆ மேவுபால் நீர் பிரிக்கின்ற அன்னம்போல் தாமே தனி மன்றில் தன்னம் தனி நித்தம் தீ மேவு பல் கரணங்களுள் உற்றன தாம் ஏழ்பிறப்பு எரி சார்ந்தவித்தாமே.
வித்தைக் கெடுத்து வியாக் கிரத்தே மிகச் சுத்தத் துரியம் பிறந்து துடக்கு அற ஒத்துப் புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே.
சிவ யோகம் ஆவது சித்த சித்து என்று தவ யோகத்து உள்புக்குத் தன்னொளி தானாய் அவயோகம் சாராது அவன் பதி போக நவ யோக நந்தி நமக்கு அளித்தானே.
அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள் அளித்தான் பேர் இன்பத்து அருள் வெளிதானே.
வெளியில் வெளிபோய் விரவிய வாறும் அளியில் அளிபோய் அடங்கியவாறும் ஒளியில் ஒளி போய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.
சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர் சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர முத்தர் தம் முத்தி முதல் முப்பத்து ஆறே.
முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய் ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளிபுக்குச் செப்ப அரிய சிவம் கண்டு தான் தெளிந்து அப்பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே.
இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக் காலத்து இயல்பைக் குறித்து அங்கு இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே.
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பர் கண்டு ஆரச் சுருதிக் கண்தூக்கமே.
தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் சிவ போகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே.
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை அவ்வாறு அருள் செய்வான் ஆதி அரன் தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும் செவ்வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம்.
மாணிக்கத்து உள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய் ஆணிப் பொன் மன்றினில் ஆடும் திருக் கூடத்தைப் பேணித் தொழுது என்ன பேறு பெற்றாரே.
பெற்றார் உலகில் பிரியாப் பெரு நெறி பெற்றார் உலகில் பிறவாப் பெரும் பயன் பெற்றார் அம் மன்றில் பிரியாப் பெரும் பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல் அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர் ஒருமையுள் ஆமைபோல் உள் ஐந்து அடக்கி இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே.
புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தாற் போல் திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும் உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால் கரை அற்ற சோதி கலந்த அசத்தமே.
சத்தம் முதல் ஐந்தும் தன் வழித் தான் சாரில் சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறு உண்டோ சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும் அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே.
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பு எனப் பேர் பெற்று உருச் செய்த அவுரு அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல் செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.
அடங்கும் பேர் அண்டத்து அணு அண்டம் சென்று அங்கு இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ கடம் தொறும் நின்ற உயிர் கரைகாணில் திடம் பெற நின்றான் திருவடி தானே.
திருவடியே சிவம் ஆவது தேரில் திருவடியே சிவலோகம் சிந்திக்கில் திருவடியே செல் கதி அது செப்பில் திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே.
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.
தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும் தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும் தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும் தானே தனித்து எம்பிரான் தனைச் சந்தித்தே.
சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால் புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே.
போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப் போதம் தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார் நாதன் நடத்தால் நயனம் களிகூர வேதம் துதித்திடப் போய் அடைந்தார் விண்ணே.