பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கட்டக் கழன்று கீழ் நான்று வீழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலி விட்டத்தைப் பூட்டி மேல் பையைத் தாள் கோத்து நட்டம் இருக்க நரன் இல்லை தானே.
வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகை மேல் கண்ணாறு மோழை படாமல் கரை கட்டி விண் ஆறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கு அற்ற வாறே.
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சேரவும் வேண்டாம் உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே.
ஆய்ந்து உரை செய்யில் அமுதம் நின்று ஊறிடும் வாய்ந்து உரை செய்யும் வருகின்ற காலத்து நீந்து உரை செய்யில் நிலா மண்டலம் அதாய்ப் பாய்ந்து உரை செய்தது பாலிக்கு மாறே.
நாவின் நுனியை நடுவே சிவிறிடில் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லை சத கோடி ஊனே.
ஊன் ஊறல் பாயும் உயர் வரை உச்சி மேல் வான் ஊறல் பாயும் வகை அறிவார் இல்லை வான் ஊறல் வகை அறி வாளர்க்குத் தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே.
மேலை அண் நாவில் விரைந்து இருகால் இடில் காலனும் இல்லை கதவும் திறந்திடும் ஞாலம் அறிய நரை திரை மாறிடும் பாலனும் ஆவான் பரா நந்தி ஆணையே.
நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டுச் சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும் பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாகச் சிந்தித்து இருப்பவர் தீவினையாளரே.
தீவினை ஆடத் திகைத்து அங்கு இருந்தவர் நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை பாவினை நாடிப் பயன் அறக் கண்டவர் தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே.
தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர் ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு கோங் கரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே.
ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டுத் தேன் நீர் பருகிச் சிவாய நம என்று கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும் வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே.
வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர் காய்ந்து அறிவு ஆகக் கருணை பொழிந்திடும் பாய்ந்து அறிந்து உள்ளே படிக் கதவு ஒன்று இட்டுக் கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே
கோயிலின் உள்ளே குடி செய்து வாழ்பவர் தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும் காயினும் நல்லவர் காய்ந்தவர் தம் உளும் தீயினும் தீயரத் தீவினை யாளர்க்கே.
தீவினை யாளர் தம் சென்னியில் உள்ளவன் பூவினை யாளர் தம் பொன் பதி ஆனவன் பாவினை யாளர் தம் பாகவத்து உள்ளவன் மாவினை யாளர் தம் மதியில் உள்ளானே.
மதியின் எழும் கதிர் போலப் பதினாறாய்ப் பதிமனை நூறு நூற்று இருபத்து நாலாய்க் கதி மனை உள்ளே கணைகள் பரப்பி எதிர் மலையாமல் இருந்தனன் தானே.
இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ இருந்தனள் கன்னியும் அந் நடு ஆக இருந்தனள் மான் நேர் முக நிலவார இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.
பொழிந்த இரு வெள்ளி பொன் மண் நடையில் வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்குக் கொழுந்து அது ஆகும் குணம் அது தானே.
குணம் அது ஆகிய கோமள வல்லி மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில் தனம் அது ஆகிய தத்துவ ஞானம் இனம் அது ஆக இருந்தனன் தானே.
இருந்த பிராணனும் உள்ளே எழும் ஆம் பரிந்த இத் தண்டுடன் அண்டம் பரிய விரிந்த அப் பூவுடன் மேல் எழ வைக்கின் மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே.
மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தைக் கண்டகத்து அங்கே கருதியே கீழ்க் கட்டிப் பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆகக் குண்டலக் காதனும் கூத்து ஒழிந்தானே.
ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும் கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும் வழிகின்ற காலத்து வட்டக் கழலைப் பழிகின்ற காலத்துப் பை அகற்றீரே.
பையினின் உள்ளே படிக் கதவு ஒன்று இடின் மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம் கையின் உள் வாயுக் கதித்து அங்கு எழுந்திடின் மை அணி கோயில் மணி விளக்கு ஆமே.
விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே வணங்கிடும் மண்டலம் வாய்த்திடக் கும்பிச் சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே.
சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும் சொல்லலும் ஆகும் மண் நீர்க் கடினமும் சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில் சொல்லலும் ஆம் தூர தரிசனம் தானே.
தூர தரிசனம் சொல்லுவான் காணலாம் கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பு எய்தி ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில் பாரார் உலகம் பகன் முன்னது ஆமே.
முன் எழு நாபிக்கு முந்நால் விரல் கீழே பன் எழு வேதப் பகல் ஒளி உண்டு என்னும் நன் எழு நாதத்து நல் தீபம் வைத்திடத் தன் எழு கோயில் தலைவனும் ஆமே.