பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

பிரார்த்தனைப் பத்து
வ.எண் பாடல்
1

கலந்து, நின் அடியாரோடு, அன்று, வாளா, களித்திருந்தேன்;
புலர்ந்து போன, காலங்கள்; புகுந்து நின்றது இடர், பின் நாள்;
உலர்ந்து போனேன்; உடையானே! உலவா இன்பச் சுடர் காண்பான்,
அலந்து போனேன்; அருள் செய்யாய், ஆர்வம் கூர, அடியேற்கே!

2

அடியார் சிலர், உன் அருள் பெற்றார், ஆர்வம் கூர; யான் அவமே,
முடை ஆர் பிணத்தின், முடிவு இன்றி, முனிவால், அடியேன், மூக்கின்றேன்;
கடியேனுடைய கடு வினையைக் களைந்து, உன் கருணைக் கடல் பொங்க,
உடையாய்! அடியேன் உள்ளத்தே ஓவாது உருக, அருளாயே!

3

அருள் ஆர் அமுதப் பெரும் கடல்வாய், அடியார் எல்லாம் புக்கு அழுந்த,
இருள் ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய்; எம்மானே!
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று, இங்கு, எனைக் கண்டார்
வெருளாவண்ணம், மெய் அன்பை, உடையாய்! பெற நான் வேண்டுமே!

4

வேண்டும், வேண்டும், மெய் அடியார் உள்ளே, விரும்பி, எனை அருளால்
ஆண்டாய்; அடியேன் இடர் களைந்த அமுதே! அரு மா மணி முத்தே!
தூண்டா விளக்கின் சுடர் அனையாய்! தொண்டனேற்கும் உண்டாம்கொல்
வேண்டாது ஒன்றும் வேண்டாது, மிக்க அன்பே மேவுதலே?

5

மேவும் உன் தன் அடியாருள் விரும்பி, யானும், மெய்ம்மையே,
காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா, உன் தன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரம ஆனந்தப் பழம் கடல் சேர்ந்து,
ஆவி, யாக்கை, யான், எனது, என்று யாதும் இன்றி, அறுதலே?

6

அறவே பெற்றார், நின் அன்பர் அந்தம் இன்றி, அகம் நெகவும்;
புறமே கிடந்து, புலை நாயேன் புலம்புகின்றேன்; உடையானே!
பெறவே வேண்டும், மெய் அன்பு; பேரா, ஒழியா, பிரிவு இல்லா,
மறவா, நினையா, அளவு இலா, மாளா, இன்ப மா கடலே!

7

கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண,
இடரே பெருக்கி, ஏசற்று, இங்கு, இருத்தல் அழகோ, அடி நாயேன்?
உடையாய்! நீயே அருளுதி என்று, உணர்த்தாது ஒழிந்தே, கழிந்தொழிந்தேன்;
சுடர் ஆர் அருளால், இருள் நீங்க, சோதீ! இனித்தான் துணியாயே!

8

துணியா, உருகா, அருள் பெருகத் தோன்றும் தொண்டர் இடைப் புகுந்து,
திணி ஆர் மூங்கில் சிந்தையேன், சிவனே! நின்று தேய்கின்றேன்;
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய்; அருள் அளியத்
தணியாது, ஒல்லை வந்தருளி, தளிர் பொன் பாதம் தாராயே!

9

தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று, உன் தமர் எல்லாம்
ஆரா நின்றார்; அடியேனும், அயலார் போல, அயர்வேனோ?
சீர் ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா!
பேர் ஆனந்தம் பேராமை வைக்கவேண்டும், பெருமானே!

10

மான் ஓர் பங்கா! வந்திப்பார் மதுரக் கனியே! மனம் நெகா
நான், ஓர் தோளாச் சுரை ஒத்தால், நம்பி! இனித்தான் வாழ்ந்தாயே?
ஊனே புகுந்த உனை உணர்ந்தே, உருகிப் பெருகும் உள்ளத்தை,
கோனே! அருளும் காலம் தான், கொடியேற்கு, என்றோ கூடுவதே?

11

கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார், சிரிப்பார், களிப்பாராய்;
வாடி வாடி, வழி அற்றே, வற்றல் மரம் போல் நிற்பேனோ?
ஊடி ஊடி, உடையாயொடு கலந்து, உள் உருகி, பெருகி, நெக்கு,
ஆடி ஆடி, ஆனந்தம் அதுவே ஆக, அருள் கலந்தே!