பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஓடும், கவந்தியுமே, உறவு என்றிட்டு, உள் கசிந்து; தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து; கூடும், உயிரும், குமண்டையிடக் குனித்து; அடியேன் ஆடும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
துடி ஏர் இடுகு இடைத் தூ மொழியார் தோள் நசையால் செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும், முடியேன்; பிறவேன்; எனைத் தன தாள் முயங்குவித்த அடியேன் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
என்பு உள் உருக்கி, இரு வினையை ஈடு அழித்து, துன்பம் களைந்து, துவந்துவங்கள் தூய்மை செய்து, முன்பு உள்ளவற்றை முழுது அழிய, உள் புகுந்த அன்பின் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
குறியும், நெறியும், குணமும், இலாக் குழாங்கள் தமைப் பிறியும் மனத்தார் பிறிவு அரிய பெற்றியனை; செறியும் கருத்தில் உருத்து, அமுது ஆம் சிவ பதத்தை; அறியும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
பேரும், குணமும், பிணிப்பு உறும் இப் பிறவி தனைத் தூரும் பரிசு, துரிசு அறுத்து, தொண்டர் எல்லாம் சேரும் வகையால், சிவன் கருணைத் தேன் பருகி, ஆரும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
கொம்பில் அரும்பு ஆய், குவி மலர் ஆய், காய் ஆகி, வம்பு பழுத்து, உடலம் மாண்டு, இங்ஙன் போகாமே; நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம், நான் அணுகும் அம் பொன் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய, மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப, கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம் எனக் களித்து, இங்கு அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
இடக்கும் கரு முருட்டு ஏனப் பின், கானகத்தே, நடக்கும் திருவடி என் தலைமேல் நட்டமையால், கடக்கும் திறல் ஐவர் கண்டகர் தம் வல் அரட்டை அடக்கும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
பாழ்ச் செய் விளாவி, பயன் இலியாய்க் கிடப்பேற்கு, கீழ்ச் செய் தவத்தால் கிளியீடு நேர்பட்டு, தாள் செய்ய தாமரைச் சைவனுக்கு, என் புன் தலையால் ஆட்செய் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
கொம்மை வரி முலைக் கொம்பு அனையாள் கூறனுக்கு, செம்மை மனத்தால் திருப் பணிகள் செய்வேனுக்கு, இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும், அம்மை குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.