பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
புணர்ப்பது ஒக்க, எந்தை! என்னை ஆண்டு, பூண நோக்கினாய்; புணர்ப்பது அன்று இது என்ற போது, நின்னொடு என்னொடு, என் இது ஆம்? புணர்ப்பது ஆக, அன்று இது ஆக, அன்பு நின் கழல்கணே புணர்ப்பது ஆக, அம் கணாள, புங்கம் ஆன போகமே!
போகம் வேண்டி, வேண்டிலேன் புரந்தர ஆதி இன்பமும்; ஏக! நின் கழல் இணை அலாது இலேன், என் எம்பிரான்; ஆகம் விண்டு, கம்பம் வந்து, குஞ்சி அஞ்சலிக்கணே ஆக, என் கை; கண்கள் தாரை ஆறு அது ஆக; ஐயனே!
ஐய, நின்னது அல்லது இல்லை, மற்று ஓர் பற்று, வஞ்சனேன்; பொய் கலந்தது அல்லது இல்லை, பொய்மையேன்; என் எம்பிரான், மை கலந்த கண்ணி பங்க, வந்து நின் கழல்கணே மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே.
வேண்டும், நின் கழல்கண் அன்பு; பொய்மை தீர்த்து, மெய்ம்மையே ஆண்டுகொண்டு, நாயினேனை, ஆவ என்று அருளு, நீ; பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி! போற்றி! என்றும், என்றும் மாண்டு மாண்டு, வந்து வந்து, மன்ன! நின் வணங்கவே.
வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஓர் உண்மை இன்மையின்; வணங்கி, யாம், விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்கு, இணங்கு கொங்கை மங்கை பங்க! என் கொலோ நினைப்பதே?
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை, ஏய வாக்கினால் தினைத்தனையும் ஆவது இல்லை; சொல்லல் ஆவ கேட்பவே; அனைத்து உலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா; எனைத்து, எனைத்து அது, எப் புறத்தது எந்தை பாதம் எய்தவே?
எய்தல் ஆவது என்று, நின்னை, எம்பிரான்? இவ் வஞ்சனேற்கு உய்தல் ஆவது, உன்கண் அன்றி, மற்று ஓர் உண்மை இன்மையின், பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு; பாவியேற்கு இஃது அலாது, நின்கண் ஒன்றும்வண்ணம் இல்லை; ஈசனே!
ஈசனே! நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும், பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன். என் எம்பிரான்! நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா! ஒர் நின் அலால், தேசனே! ஓர் தேவர் உண்மை சிந்தியாது, சிந்தையே.
சிந்தை, செய்கை, கேள்வி, வாக்கு, சீர் இல் ஐம் புலன்களால், முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன், வெந்து, ஐயா, விழுந்திலேன்; என் உள்ளம் வெள்கி விண்டிலேன்; எந்தை ஆய நின்னை, இன்னம் எய்தல் உற்று, இருப்பனே.
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன தாள் கருப்பு மட்டு வாய் மடுத்து, எனைக் கலந்து போகவும், நெருப்பும் உண்டு; யானும் உண்டிருந்தது உண்டு; அது; ஆயினும், விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே!