குலம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னை,
குலவரையின் மடப்பாவை இடப்பாலானை,
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டிக் கொண்ட
மறையவனை, பிறை தவழ் செஞ்சடையினானை
சலம் கெடுத்துத் தயா மூல தன்மம் என்னும்
தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலம் கொடுக்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான்
அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.