உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய்;
ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்;
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்;
காளத்திக் கற்பகம் ஆய் நின்றான் கண்டாய்;
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய்;
என் நெஞ்சத்துள்-நீங்கா எம்மான் கண்டாய்;
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.