பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஆனைக்கா - திருவிராகம்
வ.எண் பாடல்
1

வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை,
தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்,
ஆனைக்காவில் அண்ணலை, அபயம் ஆக வாழ்பவர்
ஏனைக் காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே.

2

சேறு பட்ட தண்வயல் சென்றுசென்று, சேண் உலாவு
ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறு பட்ட மேனியார், நிகர் இல் பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார்; விண்ணில் எண்ண வல்லரே.

3

தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான்,
ஈரம் ஆய புன்சடை ஏற்ற திங்கள் சூடினான்,
ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை,
வாரம் ஆய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.

4

விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால்விடை,
சுண்ணவெண் நீறு ஆடினான்; சூலம் ஏந்து கையினான்;
அண்ணல் கண் ஓர் மூன்றினான்; ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே.

5

வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள்! ஆண்ட சீா
மை கொள் கண்டன், வெய்ய தீ மாலை ஆடு காதலான்,
கொய்ய விண்ட நாள்மலர்க்கொன்றை துன்று சென்னி எம்
ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே!

6

நாணும் ஓர்வு, சார்வும், முன் நகையும், உட்கும், நன்மையும்,
பேண் உறாத செல்வமும், பேச நின்ற பெற்றியான்-
ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும் கண்ணு மூன்று உடைக் கறை கொள் மிடறன்
அல்லனே!

7

கூரும் மாலை, நண்பகல், கூடி வல்ல தொண்டர்கள்
பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான்;
பாரும் விண்ணும் கைதொழ, பாயும் கங்கை செஞ்சடை
ஆரம் நீரொடு ஏந்தினான்; ஆனைக்காவு சேர்மினே!

8

பொன் அம் மல்கு தாமரைப்போது தாது வண்டு இனம்
அன்னம் மல்கு தண்துறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்ன வல்ல, நால்மறை பாட வல்ல, தன்மையோர்
முன்ன வல்லர், மொய்கழல்; துன்ன வல்லர், விண்ணையே.

9

ஊனொடு உண்டல் நன்று என, ஊனொடு உண்டல் தீது என,
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்;
வானொடு ஒன்று சூடினான்; வாய்மை ஆக மன்னி நின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான்; ஆனைக்காவு சேர்மினே!

10

கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும்,
மெய்யைப் போர்க்கும் பொய்யரும், வேதநெறியை அறிகிலார்
தையல் பாகம் ஆயினான், தழல் அது உருவத்தான், எங்கள்
ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே!

11

ஊழி ஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும்,
ஆழியானும், காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை,
காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை
வாழி ஆகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.