பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள், தெள் ஆறாச் சிவசோதித்திரளினை, கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை நள்ளாறா! என, நம் வினை நாசமே.
ஆரணப் பொருள் ஆம் அருளாளனார் வாரணத்து உரி போர்த்த மணாளனார்- நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார்; காரணக் கலைஞானக் கடவுளே.
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு, எயில் சோகம் பூண்டு அழல் சோர, தொட்டான் அவன் பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு, நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே.
மலியும் செஞ்சடை வாள் அரவ(ம்)மொடு பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார், நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர் தம் வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே.
உறவனாய் நிறைந்து, உள்ளம் குளிர்ப்பவன்; இறைவன் ஆகி நின்று, எண் நிறைந்தான் அவன் நறவம் நாறும் பொழில்-திரு நள்ளாறன்; மறவனாய்ப் பன்றிப் பின் சென்ற மாயமே!
செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதியார்; நக்கர்-அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்; வக்கரன்(ன்) உயிர் வவ்விய மாயற்குச் சக்கரம்(ம்) அருள் செய்த சதுரரே.
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்; விஞ்சையின் செல்வப் பாவைக்கு வேந்தனார்; வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார்- நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே.
அல்லன் என்றும் அலர்க்கு, அருள் ஆயின சொல்லன் என்று,-சொல்லா மறைச்சோதியான்,- வல்லன் என்றும், வல்லார் வளம் மிக்கவர்; நல்லன், என்றும் நல்லார்க்கு, நள்ளாறனே.
பாம்பு அணைப் பள்ளி கொண்ட பரமனும், பூம் பணைப் பொலிகின்ற புராணனும், தாம் பணிந்து அளப்ப ஒண்ணாத் தனித் தழல்- நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே.
இலங்கை மன்னன் இருபது தோள் இற மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர், நலம் கொள் நீற்றர், நள்ளாறரை, நாள் தொறும் வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.