பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்புகலூர்
வ.எண் பாடல்
1

துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி,
பொன் நக்கன்ன சடை, புகலூரரோ!
மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன்
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?

2

இரைக்கும் பாம்பும், எறிதரு திங்களும்,
நுரைக்கும் கங்கையும், நுண்ணிய செஞ்சடை,
புரைப்பு இலாத பொழில் புகலூரரை
உரைக்குமா சொல்லி ஒள்வளை சோருமே.

3

ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர்குழல்!
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டன-
ரோ? சொலாய், மகளே! முறையோ? என்று
பூசல் நாம் இடுதும், புகலூரர்க்கே.

4

மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை,
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை,
புன்னைக் காவல் பொழில் புகலூரனை,
என்னுள் ஆக வைத்து இன்பு உற்று இருப்பனே.

5

விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
எண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும்
கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில்,
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!

6

அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு,
பண்டு நால்மறை ஓதிய பாடலன்;
தொண்டர் ஆகித் தொழுது மதிப்பவர்
புண்டரீகத்து உளார்-புகலூரரே.

7

தத்துவம் தலை கண்டு அறிவார் இலை;
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்;
தத்துவம் தலை நின்றவர்க்கு அல்லது
தத்துவன்(ன்) அலன், தண் புகலூரனே.

8

பெருங் கை ஆகிப் பிளிறி வருவது ஓர்
கருங்கையானைக்-களிற்று உரி போர்த்தவர்;
வரும் கை யானை மதக்களிறு அஞ்சினைப்
பொரும் கை யானை கண்டீர்-புகலூரரே.

9

பொன் ஒத்த(ந்) நிறத்தானும் பொருகடல்
தன் ஒத்த(ந்) நிறத்தானும் அறிகிலா,
புன்னைத் தாது பொழில், புகலூரரை,
என் அத்தா! என, என் இடர் தீருமே.

10

மத்தனாய், மதியாது, மலைதனை
எத்தினான் திரள் தோள் முடிபத்து இற
ஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும்
பொத்தினான் புகலூரைத் தொழுமினே!