பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஐயாறு
வ.எண் பாடல்
1

சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்;
பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்;
முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து
அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.

2

பாகம் மாலை,- மகிழ்ந்தனர்,- பால்மதி;
போக, ஆனையின் ஈர் உரி போர்த்தவர்
கோகம்மாலை, குலாயது ஓர் கொன்றையும்,
ஆக, ஆன்நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே.

3

நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்தன்னுளே
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு, நான்,
துஞ்சும் போழ்து, நின் நாமத் திரு எழுத்து-
அஞ்சும் தோன்ற, அருளும் ஐயாறரே.

4

நினைக்கும் நெஞ்சின் உள்ளார்; நெடு மா மதில்-
அனைத்தும் ஒள் அழல்வாய் எரியூட்டினார்;
பனைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்
அனைத்துவாய்தலுள் ஆரும் ஐயாறரே.

5

பரியர்; நுண்ணியர்; பார்த்தற்கு அரியவர்;
அரிய பாடலர்; ஆடலர்; அன்றியும்
கரிய கண்டத்தர்; காட்சி பிறர்க்கு எலாம்
அரியர்; தொண்டர்க்கு எளியர்-ஐயாறரே.

6

புலரும் போதும், இலாப் பட்ட பொன்சுடர்,
மலரும் போதுகளால் பணிய, சிலர்;
இலரும், போதும் இலாததும் அன்றியும்;
அலரும் போதும் அணியும் ஐயாறரே.

7

பங்கு அ(ம்)ம்மாலைக் குழலி, ஓர் பால்நிறக்
கங்கை, மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை, மாலை மதியமும், கண்ணியும்,
அங்கமாலையும், சூடும் ஐயாறரே.

8

முன்னை ஆறு முயன்று எழுவீர்; ழுஎலாம்
பின்னை ஆறு பிரிழு எனும் பேதைகாள்!
மன் ஐ ஆறு மருவிய மாதவன்
தன் ஐயாறு தொழ, தவம் ஆகுமே.

9

ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி
வானை ஆறு வளாயது காண்மினோ!
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன் அருள்
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே.

10

அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்;
அரக்கின் சேவடியாள் அஞ்ச, அஞ்சல்! என்று,
அரக்கன் ஈர்-ஐந்துவாயும் அலறவே,
அரக்கினான், அடியாலும்-ஐயாறனே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஐயாறு
வ.எண் பாடல்
1

சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி
சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர்
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

2

மூல வண்ணத்தராய், முதல் ஆகிய
கோல வண்ணத்தர் ஆகி, கொழுஞ் சுடர்
நீலவண்ணத்தர் ஆகி, நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர்-ஐயாறரே.

3

சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும்,
அந்திப் போது அழகு ஆகிய வண்ணமும்,
பந்திக் காலனைப் பாய்ந்தது ஓர் வண்ணமும்,
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

4

இருளின் வண்ணமும், ஏழ் இசை வண்ணமும்,
சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும்,
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்,
அருளும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

5

இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல்
குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்,
மழைக்கண் மா முகில் ஆகிய வண்ணமும்,
அழைக்கும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

6

இண்டை வண்ணமும், ஏழ் இசை வண்ணமும்,
தொண்டர் வண்ணமும், சோதியின் வண்ணமும்,
கண்ட வண்ணங்கள் ஆய்க் கனல் மா மணி
அண்ட வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

7

விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும்,
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்,
விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்,
அரும்பின் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

8

ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும்,
வேழ் ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும்,
வாழித் தீ உரு ஆகிய வண்ணமும்,
ஆழி வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

9

செய் தவன் திருநீறு அணி வண்ணமும்,
எய்த நோக்க(அ)அரிது ஆகிய வண்ணமும்,
கைது காட்சி அரியது ஓர் வண்ணமும்,
ஐது வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

10

எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்,
இடர்(க்)கள் போல் பெரிது ஆகிய வண்ணமும்,
கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும்,
அடுத்த வண்ணமும், ஆவர்-ஐயாறரே.