பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
இசைந்து எழும் அன்பில் எழுந்த படியே பசைந்து எழும் ஈசரைப் பாசத்து உள் ஏகச் சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க உவந்த குரு பதம் உள்ளத்து வந்ததே.
தாள் தந்த போதே தலை தந்த எம் இறை வாள் தந்த ஞான வலியையும் தந்து இட்டு வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்ட அருள் பாடின் முடி வைத்துப் பார் வந்து தந்ததே.
தானவன் ஆகிச் சொரூபத்து வந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி தான் அடி முன் சூட்டித் தாபித்தது உண்மையே.
உரை அற்று உணர்வு அற்று உயிர் பரம் அற்று திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்த்துக் கரை அற்ற சத்து ஆதி நான்கும் கடந்த சொரூபத்து இருத்தினன் சொல் இறந்தோமே.
குரவன் உயிர் முச் சொரூ பமும் கைக் கொண்டு அரிய பொருள் முத்திரை ஆகக் கொண்டு பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று உருகிட என்னை அங்கு உய்யக் கொண்டானே.
பேச்சு அற்ற இன்பத்துப் பேர் ஆனந்தத்திலே மாச்சு அற்ற என்னைச் சிவம் ஆக்கி ஆள்வித்துச் காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கைக் கொண்டு வாச்ச புகழ் மாளத் தாள் தந்து மன்னுமே.
இதயத்தும் நாட்டத்தும் என்தன் சிரத்தும் பதிவித்த பாதப் பராபரன் நந்தி கதி வைத்த வாறும் மெய் காட்டிய வாறும் விதி வைத்த வாறும் விளம்ப ஒண்ணாதே.
திருவடி வைத்து என் சிரத்து அருள் நோக்கிப் பெருவடி வைத்து அந்தப் பேர் நந்தி தன்னைக் குரு வடிவில் கண்ட கோனை எம் கோவைக் கரு வழி ஆற்றிடக் கண்டு கொண்டேனே.
திருவடி ஞானம் சிவம் ஆக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறை மலம் மீட்கும் திருவடி ஞானமே திண் சித்தி முத்தியே.
மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல்வினை மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும் பால் வைத்த சென்னிப் படர் ஒளி வானவன் தாள் வைத்த வாறு தரிப்பித்த வாறே.
கழல் ஆர் கமலத் திருவடி என்னும் நிழல் சேரப் பெற்றேன் நெடுமால் அறியா அழல் சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும் குழல் சேரும் என் உயிர்க் கூடும் குலைத்தே.
முடி மன்னராய் மூ உலகம் அது ஆள்வர் அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின் முடி மன்னராய் நின்ற தேவர்கள் ஈசன் குடி மன்னராய் குற்றம் அற்று நின்றாரே.
வைத்தேன் அடிகள் மனத்து உள்ளே நான் பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல் எய்த்தேன் உழலும் இருவினை மாற்றி இட்டு மெய்த்தேன் அறிந்தேன் அவ் வேதத்தின் அந்தமே.
அடிசாரலாம் அண்ணல் பாதம் இரண்டும் முடிசார வைத்தனர் முன்னை முனிவர் படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக் குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே.
மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும் தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும் சுந்தரம் ஆவதும் தூய் நெறி ஆவதும் எந்தை பிரான் தன் இணை அடி தானே.