பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சீவ துரியத்துத்தொம் பதம் சீவன் ஆர் தாவு பர துரியத் தினில் தற்பதம் மேவு சிவ துரியத் தசி மெய்ப் பதம் ஓவி விடும் தத்துவ மசி உண்மையே.
ஆறு ஆறு அகன்ற அணுத் தொம் பதம் சுத்தம் ஈறு ஆன தற்பதம் எய்துப சாந்தத்துப் பேறு ஆகிய சீவன் நீங்கிப் பிரசாதத்து வீறு ஆன தொந்தத் தசி தத்வ மசியே.
துவந்தத் தசியே தொந்தத் தசியும் அவை மன்னா வந்து வயத் தேகம் ஆன தவம் உறு தத்துவ மசி வேதாந்த சிவமாம் அதும் சித்தாந்த வேதாந்தமே.
தொம் பதம் தற்பதம் சொல்லும் அசிபதம் நம்பிய முத் துரியத்துமேல் நாடவே உம் பதமும் பதம் ஆகும் உயிர்பரன் செம் பொருள் ஆன சிவம் எனல் ஆமே.
வைத்த துரியம் அதில் சொரு பானந்தத்து உய்த்த பிரணவம் ஆம் உப தேசத்தை மெய்த்த விதயத்து விட்டிடும் மெய் உணர் வைத்த படியே அடைந்து நின்றானே.
நனவாதி ஐந்தையும் நாத ஆதியில் வைத்துப் பினமா மலத்தைப் பின்வைத்துப் பின் சுத்தத் தனதாம் சிவகதி சத்து ஆதி சாந்தி மனவாசகம் கெட்ட மன்னனை நாடே.
பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின் பேரணி யாது அது பேச்சு ஒன்று இலாமையில் ஓரணை யாது அது ஒன்றும் இலாமையில் காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.
நீ அது ஆனாய் என நின்ற பேருரை ஆயது நான் ஆனேன் என்னச் சமைந்து அறச் சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேர் அருள் ஆய அதுவாய் அனந்து ஆன் நந்தி ஆகுமே.
உயிர் பரம் ஆக உயர் பர சீவன் அரிய சிவம் ஆக அச்சிவ வேதத் திரியிலும் சீர் ஆம் பரா பரன் என்ன உரிய உரை அற்ற ஓம் மயம் ஆமே.
வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில் ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும் தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி சேய் நாடு ஒளி எனச் சிவகதி ஐந்துமே.
அறிவு அறியாமை இருண்டும் அகற்றிச் செறிவு அறிவாய் எங்கும் நின்ற சிவனைப் பிறிவு அறியாது பிரான் என்று பேணும் குறி அறியாதவர் கொள் அறியாரே.
அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்பும் கலப்பும் அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால் அறிவான் அறிந்த அறிவு அறியோமே.
அடி தொழ முன் நின்று அமரர்கள் அத்தன் முடி தொழ ஈசனும் முன் நின்று அருளிப் படி தொழ நீ பண்டு பாவித்தது எல்லாம் கடி தொழக் காண் என்னும் கண் நுதலானே.
நின்மல மேனி நிமலன் பிறப்பு இலி என்னுளம் வந்து இவன் என் அடியான் என்று பொன் வளர் மேனி புகழ் கின்ற வானவன் நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே.
துறந்து புக்கு ஒள் ஒளி சோதியைக் கண்டு பறந்தது என் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்து அறியா என்னை வானவர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே
மெய்வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த் தோற்றத்து அவ்வாய அந்தக் கரணம் அகிலமும் எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால் கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே.