பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

தற்சிறப்புப் பாயிரம் / திருமூலர் வரலாறு
வ.எண் பாடல்
1

நந்தி இணை அடி யான் தலை மேல் கொண்டு
புந்தியின் உள்ளே புகப் பெய்து போற்றிசெய்து
அந்திமதி புனை அரன் அடி நாள்தொறும்
சிந்தை செய்து ஆகமம் செப்பல் உற்றேனே.

2

செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள் நந்திதாள் பெற்றுத்
தப்பு இலா மன்றில் தனிக் கூத்துக் கண்ட பின்
ஒப்பு இல் எழுகோடி யுகம் இருந்தேனே.

3

இருந்த அக் காரணம் கேள் இந்திரனே
பொருந்திய செல்வப் புவனா பதி ஆம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்து உடன் வந்தனன் பத்தியினாலே.

4

மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியாள் நேரிழையாள் ஒடு
மூலாங்கம் ஆக மொழிந்த திருக் கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.

5

நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்தப்
பேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள்
சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை
சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே.

6

சேர்ந்து இருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்
சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை
சேர்ந்து இருந்தேன் சிவ போதியின் நீழலில்
சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே.

7

அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகல் இடத்து எம்மெய்யைப் போத விட்டானைப்
பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே.

8

இருந்தேன் இக் காயத்தே எண் இலி கோடி
இருந்தேன் இராப் பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என் நந்தி இணை அடிக் கீழே.

9

ஞானத் தலைவிதன் நந்தி நகர் புக்கு
ஊனம் இல் ஒன்பது கோடி உகம் தனுள்
ஞானப் பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து
யானும் இருந்தேன் நல் போதியின் கீழே.

10

செல்கின்ற ஆறு அறி சிவ முனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே.

11

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமம் ஆகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.

12

நேர்ந்திடு மூல சரியை நெறி இது என்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடுஞ் சுத்த சைவத்து உயிர் அதே.

13

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான் பற்றி நின்ற மறைப் பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர் உறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

14

பிறப்பு இலி நாதனைப் பேர் நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப் பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே.

15

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனியாது இருந்தேன் நின்ற காலம்
இதாசனியாது இருந்தேன் மன நீங்கி
உதாசனியாது உடனே உணர்ந்தேமால்.

16

அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே.

17

பண்டிதர் ஆவார் பதினெடடுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறம் சொன்ன வாறே.

18

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே.

19

**************

20

பெற்றமும் மானும் மழுவும் பிறிவு அற்ற
தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற் பதமும் அளித்தான் எங்கள் நந்தியே.

21

ஞேயத்தை ஞானத்தை ஞா துருவத்தினை
மாயத்தை மா மாயை தன்னில் வரும் பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை யகோசர
வீயத்தை முற்றும் விளக்கி இட்டேனே.

22

விளக்கிப் பரம் ஆகும் மெய்ஞ் ஞானச் சோதி
அளப்பு இல் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கு அறும் ஆனந்தக் கூத்தன் சொல் போந்து
வளப்பு இல் கயிலை வழியில் வந்தேனே.

23

நந்தி அருளாலே மூலனை நாடிப் பின்
நந்தி அருளாலே சதா சிவன் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான் இருந்தேனே.