பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மா மாயை மாயை வயிந்தவம் வைகரி ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில் தாம் ஆன மந்திரம் சத்தி தன் மூர்த்திகள் ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே.
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மணி என்ன வரு பலவாய் நிற்கும் மாமாது தானே.
தானா அமைந்த அம் முப்புரம் தன் இடைத் தான் ஆன மூ உரு ஓர் உருத் தன்மையள் தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே.
நல்கும் திரிபுரை நாத நாதாந்தங்கள் பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை நல்கும் பரை அபிராமி அகோசரி புல்கும் அருளும் அப்போதம் தந்து ஆளும்.
தாள் அணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை வார் அணி கொங்கை மலர்க் கன்னல் வாளி வில் ஏர் அணி அங்குச பாசம் எழில் முடி கார் அணி மா மணிக் குண்டலக் காதிக்கே.
குண்டலக் காதி கொலை வில் புருவத்தாள் கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள் கண்டிகை ஆரம் கதிர்முடி மா மதிச் சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே.
நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றல் இல் மோகினி மா திருக் குஞ்சிகை நன்று அறி கண்டிகை நால்கால் கரீடணி துன்றிய நல் சுத்த தாமரைச் சுத்தையே.
சுத்த அம் பாரத் தனத்தி சுகோதயள் வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை அத்தகை யாவும் அணோரணி தானும் ஆய் வைத் தவக் கோலம் மதி அவள் ஆகுமே.
அவளை அறியா அமரரும் இல்லை அவள் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை அவள் அன்றி ஊர் புகுமாறு அறியேனே.
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவார் அரு உருவாம் அவள் என்பர் அறிவார் கருமம் அவள் இச்சை என்பர் அறிவார் பரனும் அவள் இடத்தானே.
தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மா தேவி ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர்க் காவலன் வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம் கோன் எங்கும் நின்ற குறிபல பாரே.
பரா சத்தி மா சத்தி பல வகையாலும் தரா சத்தியாய் நின்ற தன்மை உணராய் உரா சத்தி ஊழிகள் தோறும் உடனே புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே.
போகம் செய் சத்தி புரி குழலா ளொடும் பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும் ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள் தொறும் பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே.
கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச் செம் பவளத் திருமேனிச் சிறுமியை நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே.
வைத்த பொருளும் மரு உயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பரா பரைச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலை அவள் ஆமே.
தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம் செயும் தூய்நெறித் தோகை கலை பல வென்றிடும் கன்னி என் உள்ளம் நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே.
நின்றவள் நேர் இழை நீள் கலை யோடு உற என்றன் அகம் படிந்து ஏழ் உலகும் தொழ மன்றது ஒன்றி மனோன் மணி மங்கலி ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே.
ஒத்து அடங்கும் கமலத்து இடை ஆயிழை அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி மத்து அடைகின்ற மனோன்மணி மங்கலி சித்து அடைக்கும் வழி தேர்ந்து உணரார்களே.
உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி மணம் கமழ் பூங் குழலாள் மங்கையும் தானும் புணர்ந்து உடனே நிற்கும் போதரும் காலைக் கணிந்து எழுவார்க்குக் கதி அளிப்பாளே.
அளி ஒத்த பெண் பிள்ளை ஆனந்த சுந்தரி புளி உறு புன் பழம் போல் உள்ளே நோக்கித் தெளி உறு வித்துச் சிவகதி காட்டி ஒளி உற வைத்து என்னை உய்ய உண்டாளே.
உண்டு இல்லை என்றது உருச் செய்து நின்றது வண்டு இல்லை மன்றின் உள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டலம் மூன்று உற மன்னி நின்றாளே.
நின்றாள் அவன் தன் உடலும் உயிருமாய் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே நின்றாள் பரம் சுடர் ஏடு அம் கையாளே.
ஏடு அம் கை நங்கை இறை எங்கள் முக் கண்ணி வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னி வாய்த் தோத்திரம் சொல்லுமே.
தோத்திரம் செய்து தொழுது துணை அடி வாய்த்திட ஏத்திவழிபடுமாறு இரும்பு ஆர்த்திடும் அங்குச பாசம் பசும் கரும்பு ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகும் ஆம் ஆதிக்கே.
ஆதி விதமிகுத்து அண்ட அந்த மால் தங்கை நீதி மலரின் மேல் நேர் இழை நாமத்தைப் பாதியில் வைத்துப் பல்கால் பயில்விரேல் சோதி மிகுத்து முக்காலமும் தோன்றுமே.
மேதாதி ஈர் எட்டும் ஆகிய மெல் இயல் வேத ஆதி நூலின் விளங்கும் பரா பரை ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள் நாதாதி நாதத்து நல்ல அருளாலே.
அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர் பொருள் பெற்ற சிந்தைப் புவனா பதியார் மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருள் உற்ற சேவடி போற்றுவன் யானே
ஆன வராக முகத்தி பதத்தினள் ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு ஏனை உழுபடை ஏந்திய வெண் நகை ஊனம் அற உணர்ந்தார் உளத்து ஓங்குமே.
ஓம் காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத்து உள்ளே இனிது இருந்தாளே.
தானே தலைவி என நின்ற தற்பரை தானே உயிர் வித்துத் தந்த பதினாலும் வானோர் தலமும் மனமும் நல் புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே.