பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருச்சதகம் - ஆனந்த பரவசம்
வ.எண் பாடல்
1

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று, இங்கு எனை வைத்தாய்;
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்;
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன்; ஆரூர் எம்
பிச்சைத் தேவா, என் நான் செய்கேன்? பேசாயே.

2

பேசப்பட்டேன் நின் அடியாரில்; திருநீறே
பூசப்பட்டேன்; பூதலரால், உன் அடியான் என்று,
ஏசப்பட்டேன்; இனிப் படுகின்றது அமையாதால்;
ஆசைப்பட்டேன்; ஆட்பட்டேன்; உன் அடியேனே.

3

அடியேன் அல்லேன் கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை கொல்லோ?
அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்;
செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா!
கடியேன் உன்னை, கண் ஆரக் காணும் ஆறு, காணேனே.

4

காணும் ஆறு காணேன்; உன்னை அந் நாள் கண்டேனும்
பாணே பேசி, என் தன்னைப் படுத்தது என்ன? பரஞ்சோதி!
ஆணே, பெண்ணே, ஆர் அமுதே, அத்தா, செத்தே போயினேன்;
ஏண் நாண் இல்லா நாயினேன், என் கொண்டு எழுகேன், எம்மானே?

5

மான் நேர் நோக்கி, உமையாள் பங்கா, மறை ஈறு அறியா மறையோனே,
தேனே, அமுதே, சிந்தைக்கு அரியாய், சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே, சிறிது என் கொடுமை பறைந்தேன்; சிவ மா நகர் குறுகப்
போனார் அடியார்; யானும், பொய்யும், புறமே போந்தோமே.

6

புறமே போந்தோம் பொய்யும், யானும்; மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்.
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்;
சிறவே செய்து வழுவாது, சிவனே! நின் தாள் சேர்ந்தாரே.

7

தாராய், உடையாய்! அடியேற்கு உன் தாள் இணை அன்பு;
போரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன் யான்;
ஊர் ஆ மிலைக்க, குருட்டு ஆ மிலைத்தாங்கு, உன் தாள் இணை அன்புக்கு
ஆரா அடியேன், அயலே மயல்கொண்டு, அழுகேனே.

8

அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த
மெழுகே அன்னார், மின் ஆர், பொன் ஆர், கழல் கண்டு
தொழுதே, உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே,
பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே?

9

பணிவார் பிணி தீர்த்தருளி, பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுத்தி; அதுவும் அரிது என்றால்,
திணி ஆர் மூங்கில் அனையேன், வினையைப் பொடி ஆக்கி,
தணி ஆர் பாதம், வந்து, ஒல்லை தாராய்; பொய் தீர் மெய்யானே!

10

யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்;
ஆனால், வினையேன் அழுதால், உன்னைப் பெறலாமே?
தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும்
மானே, அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே.