இந்திரனும், மால், அயனும், ஏனோரும், வானோரும்,
அந்தரமே நிற்க, சிவன் அவனி வந்தருளி,
எம் தரமும் ஆட்கொண்டு, தோள் கொண்ட நீற்றன் ஆய்;
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்,
பந்தம் பறிய, பரி மேல்கொண்டான், தந்த
அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் காண்; அம்மானாய்!