பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மறி ஆர் கரத்து எந்தை, அம் மாது உமையோடும் பிறியாத பெம்மான், உறையும் இடம் என்பர் பொறி வாய் வரிவண்டு தன் பூம் பெடை புல்கி, வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே.
ஒவ்வாத என்பே இழையா, ஒளி மௌலிச் செவ்வான் மதி வைத்தவர் சேர்வு இடம் என்பர் எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம்போது வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே.
கரை ஆர் கடல் நஞ்சு அமுது உண்டவர், கங்கைத் திரை ஆர் சடைத் தீவண்ணர், சேர்வு இடம் என்பர் குரை ஆர் மணியும் குளிர்சந்தமும் கொண்டு விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே.
கூச, தழல் போல் விழியா வரு கூற்றைப் பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம் வாசக் கதிர்ச்சாலி வெண்சாமரையே போல் வீச, களி அன்னம் மல்கும் விடைவாயே.
திரியும் புரம் மூன்றையும் செந்தழல் உண்ண, எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர் கிரியும் தரு மாளிகைச் சூளிகை தன்மேல் விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே.
கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத் தள்ளி, தலை தக்கனைக் கொண்டவர் சார்வு ஆம் வள்ளிமருங்குல், நெருங்கும் முலை, செவ்வாய், வெள்ளை(ந்)நகையார் நடம் செய் விடைவாயே.
பாதத்து ஒலி பாரிடம் பாட, நடம்செய் நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர் கீதத்து ஒலியும், கெழுமும் முழவோடு வேதத்து ஒலியும், பயிலும் விடைவாயே.
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம் கண் ஆர் விழவின் கடிவீதிகள் தோறும் விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே.
புள் வாய் பிளந்தான், அயன், பூமுடி பாதம், ஒள்வான் நிலம், தேடும் ஒருவர்க்கு இடம் ஆம் தெள் வார் புனல் செங்கழுநீர் முகை தன்னில் விள் வாய் நறவு உண்டு, வண்டு ஆர் விடைவாயே.
உடை ஏதும் இலார், துவர் ஆடை உடுப்போர் கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர் அடையார் புரம் வேவ, மூவர்க்கு அருள்செய்த விடை ஆர் கொடியான் அழகு ஆர் விடைவாயே.
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம் மாறு இல் பெருஞ் செல்வம் மலி விடைவாயை, நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன் கூறும் தமிழ் வல்லவர், குற்றம் அற்றோரே.