பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை; மற்றும் எல்லாம்; அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தை செய், நன் நெஞ்சமே! பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று பைம்பூஞ்- செருந்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
“என்றும் ஓர் இயல்பினர்” என நினைவு அரியவர்; ஏறு அது ஏறிச் சென்று தாம், செடிச்சியர் மனைதொறும், பலிகொளும் இயல்பு அதுவே துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது அளைந்து தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
பொறி கிளர் அரவமும், போழ் இளமதியமும், கங்கை என்னும் நெறி படு குழலியைச் சடைமிசைச் சுலவி, வெண் நீறு பூசி, கிறிபட நடந்து, நல் கிளி மொழியவர் மனம் கவர்வர் போலும் செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல் செய்து அருளவேயும், பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி ஈண்டு மா மாடங்கள், மாளிகை, மீது எழு கொடி மதியம் தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
ஏன வெண் கொம்பொடும், எழில் திகழ் மத்தமும், இள அரவும், கூனல் வெண் பிறை தவழ் சடையினர்; கொல் புலித் தோல் உடையார் ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர்; பாடுவர், அருமறைகள் தேனில் வண்டு அமர் பொழில்-திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
வெடி தரு தலையினர்; வேனல் வெள் ஏற்றினர்; விரி சடையர் பொடி அணி மார்பினர்; புலி அதள் ஆடையர்; பொங்கு அரவர்; வடிவு உடை மங்கை ஓர்பங்கினர்; மாதரை மையல் செய்வார் செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
அக்கு உலாம் அரையினர்; திரை உலாம் முடியினர்; அடிகள்; அன்று, தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்; கதிர் கொள் செம்மை புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலைத் திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே உந்தி, மா மலர் அடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர, மதுத் திவலை சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும் காணாது “அங்கணா! அருள்!” என அவர் அவர் முறைமுறை இறைஞ்ச நின்றார் சங்க நால்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல் பேண, திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
துவர் உறு விரி துகில் ஆடையர், வேடம் இல் சமணர், என்னும் அவர் உறு சிறு சொலை அவம் என நினையும் எம் அண்ணலார் தாம் கவர் உறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆல, திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
பெருந் தண் மா மலர்மிசை அயன் அவன் அனையவர், பேணு கல்வித் திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர் தம்மை, பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன அருந்தமிழ் மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே.