பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார், அடி இணைக்கீழ்; ஓதிய வேத நாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் சோதியுள் சுடர் ஆய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார்-பல்பூக் கோதி வண்டு அறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே.
நீற்றினை நிறையப் பூசி, நித்தலும் நியமம் செய்து ஆற்று நீர் பூரித்து ஆட்டும், அந்தணனாரைக் கொல்வான் “சாற்றும் நாள் அற்றது” என்று, தருமராசற்கு ஆய், வந்த கூற்றினைக் குமைப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ்த் தாபரம் மணலால் கூப்பி, அழைத்து அங்கே ஆவின் பாலைக் கறந்து கொண்டு ஆட்ட, கண்டு பிழைத்த தன் தாதை தாளைப் பெருங் கொடு மழுவால் வீச, குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.
சிலந்தியும் ஆனைக்காவில்-திரு நிழல் பந்தர் செய்து உலந்து அவண் இறந்த போதே, கோச் செங்கணானும் ஆக, கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலம் தனில் பிறப்பித்திட்டார்-குறுக்கை வீரட்டனாரே.
ஏறு உடன் ஏழ் அடர்த்தான், எண்ணி ஆயிரம் பூக் கொண்டு(வ்) ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக் கீழ்; வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை மிண்ட; கூறும் ஓர் ஆழி ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கிய(ன்)னார் நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடிக் கொல்லி ஆம் பண் உகந்தார்-குறுக்கை வீரட்டனாரே.
காப்பது ஓர் வில்லும் அம்பும், கையது ஓர் இறைச்சிப்பாரம், தோல் பெருஞ் செருப்புத் தொட்டு, தூய வாய்க் கலசம் ஆட்டி, தீப் பெருங் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுகத் தன் கண் கோப்பதும், பற்றிக் கொண்டார்-குறுக்கை வீரட்டனாரே.
நிறை மறைக் காடு தன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக் கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட, நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் குறைவு அறக் கொடுப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி; வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து; நல் அருந்தவத்த கணம் புல்லர்க்கு அருள்கள் செய்து, காதல் ஆம் அடியார்க்கு என்றும் குணங்களைக் கொடுப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.
எடுத்தனன் எழில் கயி(ல்)லை இலங்கையர் மன்னன் தன்னை அடுத்து ஒரு விரலால் ஊன்ற, அலறிப் போய் அவனும் வீழ்ந்து, விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட, கொடுத்தனர், கொற்றவாள் நாள்; குறுக்கை வீரட்டனாரே.
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும் துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக் கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.
ஆத்தம் ஆம் அயனும், மாலும், அன்றி மற்று ஒழிந்த தேவர் “சோத்தம், எம்பெருமான்!” என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல, தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் கூத்தராய் வீதி போந்தார்-குறுக்கை வீரட்டனாரே.