பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த் தேனைக் காவி உண்ணார், சிலதெண்ணர்கள்; ஆனைக்காவில் எம்மானை அணைகிலார், ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.
திருகு சிந்தையைத் தீர்த்து, செம்மை செய்து, பருகி ஊறலை, பற்றிப் பதம் அறிந்து, உருகி, நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே அருகு நின்றிடும்-ஆனைக்கா அண்ணலே.
துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும், நீர், இன்பம் வேண்டில், இராப்பகல் ஏத்துமின்! என் பொன், ஈசன், இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார், வினை காவாய்! என்று தம் கைதொழுவார்க்கு எலாம் ஆவா! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.
வஞ்சம் இன்றி வணங்குமின்! வைகலும் வெஞ்சொல் இன்றி விலகுமின்! வீடு உற நைஞ்சு நைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம், அஞ்சல்! என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.
நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே; படைகள் போல் வரும், பஞ்சமா பூதங்கள்; தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் அடைய நின்றிடும், ஆனைக்கா அண்ணலே.
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும் கழுகு அரிப்பதன் முன்னம், கழல் அடி தொழுது, கைகளால்-தூ மலர் தூவி நின்று, அழுமவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே.
உருளும்போது அறிவு ஒண்ணா; உலகத்தீர்! தெருளும், சிக்கெனத் தீவினை சேராதே! இருள் அறுத்து நின்று, ஈசன் என்பார்க்கு எலாம் அருள் கொடுத்திடும்-ஆனைக்கா அண்ணலே.
நேசம் ஆகி நினை, மட நெஞ்சமே! நாசம் ஆய குலநலம் சுற்றங்கள் பாசம் அற்று, பராபர ஆனந்த ஆசை உற்றிடும், ஆனைக்கா அண்ணலே.
ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை கீதம் கின்னரம் பாட, கெழுவினான், பாதம் வாங்கி, பரிந்து, அருள்செய்து, அங்கு ஓர் ஆதி ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.