பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / சிவபூசை
வ.எண் பாடல்
1

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே.

2

வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும்
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டு அவி காட்டுதும் பால் அவி ஆகுமே.

3

பால் மொழிப் பாகன் பரா பரன் தான் ஆகும்
மான சதா சிவன் தன்னை ஆவாகித்து
மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு
சீல் முகம் செய்யச் சிவன் அவன் ஆகுமே.

4

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனைகழல் ஈசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே.

5

மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சின் உள் ஈசன் நிலை பெறு காரணம்
அஞ்சு அமுது ஆம் உபசாரம் எட்டு எட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்து அர்ச்சித்தார்களே.

6

புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு
அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்
எண் இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே.

7

மறப்பு உற்று இவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப் பெற வேண்டும் அமரர் பிரானே.

8

ஆராதனையும் அமரர் குழாங்களும்
தீராக் கடலும் நிலத்தும் அதாய் நிற்கும்
பேர் ஆயிரமும் பிரான் திரு நாமமும்
ஆரா வழி எங்கள் ஆதிப் பிரானே.

9

ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழத்
தான் அந்தம் இல்லாத் தலைவன் அருள் அது
தேன் உந்து மாமலர் உள்ளே தெளிந்தோர்
பார் ஐங் குணமும் படைத்து நின்றானே.

10

உழைக் கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி
மழைக் கொண்ட மா முகில் மேல் சென்று வானோர்
தழைக் கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்தப்
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே.

11

வெள்ளக் கடல் உள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடல் புக்கு வார் சுமை பூக் கொண்டு
கள்ளக் கடல் விட்டுக் கை தொழ மாட்டாதார்
அள்ளல் கடல் உள் அழுந்து கின்றாரே.

12

கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து
வழிப் படுவார் மலர் மொட்டு அறியார்கள்
பழிப் படுவார் பலரும் பழி வீழ
வெளிப் படுவோர் உச்சி மேவி நின்றானே.

13

பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவிப்
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர
வயனங்களால் என்றும் வந்து நின்றானே.

14

ஏத்துவர் மா மலர் தூவித் தொழுது நின்று
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன்
மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற
தீர்த்தனை யாரும் துதித்து உணராரே.

15

தேவர்களோடு இசை வந்து மண்ணோடு உறும்
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரில் பன்மை முதல்வன் ஆய் நின்று அருள்
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே.

16

உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்திப்
பிழைப்பு இன்றி ஈசன் பெரும் தவம் பேணிப்
இழைக் கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக் கொண்டல் போலவே மன்னி நில்லீரே.

17

வென்று விரைந்து விரைப் பணி என்றனர்
நின்று பொருந்த இறை பணி நேர்படத்
துன்று சல மலர் தூவித் தொழுதிடில்
கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே.

18

சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்றக் கால்
மாத்திக்கே செல்லும் வழி அது ஆமே.

19

ஆவிக் கமலத்தின் அப்புறத்து இன்பு உற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடு போய்ச் சிவத்து இடை
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே.

20

சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினை வோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே.

21

பெரும் தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி
இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள
வரும் தன்மை யாளனை வானவர் தேவர்
தரும் தன்மை யாளனைத் தாங்கி நின்றாரே.