பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / ஐந்து இந்திரியம் அடக்கு முறைமை
வ.எண் பாடல்
1

குட்டம் ஒருமுழம் உள்ளது அரை முழம்
வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே.

2

கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம்
அடக்கலும் உறும் அவன் தானே அமரன்
விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.

3

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவு இலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இலை
அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம் என்று இட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.

4

முழக்கி எழுவன மும் மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெரும் கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.

5

ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரும் தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே.

6

பெருக்கப் பிதற்றில் என் பேய்த்தேர் நினைந்து என்
விரித்த பொருட்கு எல்லாம் வித்து ஆவது உள்ளம்
பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே.

7

இளைக்கின்ற வாறு அறிந்து இன் உயிர் வைத்த
கிளைக்கு ஒன்றும் ஈசனைக் கேடுஇல் புகழோன்
தளைக் கொன்ற நாகம் ஐஞ்சு ஆடல் ஒடுக்கத்
துளைக் கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.

8

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி
சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டு இட்டு
ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்து கொள் மேலை விதி அது தானே.

9

நடக்கின்ற நந்தியை நாள் தோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக் கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக் கோயில் ஆமே.

10

சென்றன நாழிகை நாள்கள் சில பல
நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழ அதில் தாங்கலும் ஆமே.

11

போற்றி இசைத்துப் புனிதன் திரு மேனியைப்
போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தி ஆல்
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை
ஊற்று கை உள்ளத்து ஒருங்கலும் ஆமே.

12

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சில பல பேசில்
வரிக் கொண்ட மை சூழ் வரை அது ஆமே.

13

கை விடலால் ஆவது ஒன்று இல்லை கருத்தின் உள்
எய்தி அவனை இசையினால் ஏத்து மின்
ஐவருடைய அவா வினில் தோன்றிய
பொய் வருடைய புலன்களும் ஐந்தே.