பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கண் காணி இல் என்று கள்ளம் பல செய்வார் கண் காணி இல்லா இடம் இல்லை காணுங் கால் கண் காணி ஆகக் கலந்து எங்கும் நின்றானைக் கண் காணி கண்டார் களவு ஒழிந்தாரே.
செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன் மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே.
பத்தி விற்று உண்டு பகலைக் கழிவிடு மத்தகர்க்கு அன்றோ மறு பிறப்பு உள்ளது வித்துக் குற்று உண்டு விளை புலம் பாழ்செய்யும் பித்தர் கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே.
வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை நடக்க உறுவரே ஞானம் இல்லாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.
காயக் குழப்பனைக் காய நல் நாடனைக் காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து உளே எங்கும் தேடித் திரிவர்கள் காயத்து உள் நின்ற கருத்து அறியாரே.
கண் காணி ஆகவே கை அகத்தே எழும் கண் காணி ஆகக் கருத்து உள் இருந்திடும் கண் காணி ஆகக் கலந்து வழி செய்யும் கண் காணி ஆகிய காதலன் தானே
கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை என் இது ஈசன் இயல்பு அறியாரே
காணாத கண்ணில் படலமே கண் ஒளி காணாதவர் கட்கும் காணாத அவ் வொளி காணாதவர் கட்கும் கண் ஆம் பெரும் கண்ணைக் காணாது கண்டார் களவு ஒழிந்தாரே.
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி உய்த்து ஒன்றுமா போல் வழி அந்தன் கண் ஒளி அத்தன்மை ஆதல் போல் நந்தி அருள் தரச் சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே.
பிரான் மயம் ஆகப் பெயர்ந்தன எட்டும் பராம் மயம் என்று எண்ணிப் பள்ளி உணரார் சுரா மயம் உன்னிய சூழ்வினை யாளர் நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே.
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கு எலாம் ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே.
உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும் அயர் அறிவு இல்லை ஆல் ஆருடல் வீழும் உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும் பயிரும் கிடந்து உள்ளப் பாங்கு அறியாரே.
உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும் உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும் உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும் பொருள் ஆங்கு அறியாரே.
உலகு ஆணி ஒண்சுடர் உத்தம சித்தன் நில ஆணி ஐந்தின் உள் நேர் உற நிற்கும் சில ஆணி ஆகிய தேவர் பிரானைத் தலைவாணி செய்வது தன்னை அறிவதே.
தான் அந்தம் ஆம் என நின்ற தனிச்சுடர் ஊன் அந்தம் ஆய் உலகு ஆய் நின்ற ஒண் சுடர் தேன் அந்தம் ஆய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி கோன் அந்தம் இல்லாக் குணத்து அருள் ஆமே.
உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும் கன் முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை நன் முதல் ஏறிய நாமம் அற நின்றால் தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே.
இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர் வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது தந்திடும் ஐ விதத்தால் தற்புருடனும் முந்து உள மன்னும் ஆறு ஆறு முடிவிலே.