பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அதீதத்து உள் ஆகி அகன்றவன் நந்தி அதீதத்து உள் ஆகி அறிவிலோன் ஆன்மா மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்று ஆகும் பதியில் பதியும் பரவுயிர் தானே.
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி சோதிப் பரம் சுடர் தோன்றத் தோன்றாமையின் நீதி அதாய் நிற்கும் நீடிய அப் பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.
துரியம் கடந்து துரியா தீதத்தே அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும் பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே துரிய வல்லார்க்குத் துரிசில்லை தானே.
செம்மை முன் நிற்பச் சுவேதம் திரிவபோல் அம்மெய்ப் பரத்தோடு அணுவன் உள் ஆயிடப் பொய்ம்மைச் சகம் உண்ட போத வெறும் பாழில் செம்மைச் சிவமேரு சேர் கொடி ஆகுமே.
வைச்ச கலாதி வரு தத்துவம் கெட வெச்ச இரு மாயை வேறு ஆக வேர் அறுத்து உச்ச பரசிவம் ஆம் உண்மை ஒன்றவே அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே.
என்னை அறிய இசைவித்த என் நந்தி என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்துப் பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டுத் தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே.
பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அரன் நெறி ஆயது ஆகித் தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே.
சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல் உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதம் ஆய் நித்த நடத்து நடிக்குமா நேயத்தே.
மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நராசிகள் பாலிய விந்து பரையுள் பரையாகக் கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து சீலம் இலா அணுச் செய்தி அது ஆமே.
வேறு ஆம் அதன் தன்மை போலும் இக் காயத்தில் ஆறு ஆம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம் பேறு ஆம் பர ஒளி தூண்டும் பிரகாசம் ஆய் ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே.
தற்பரம் மன்னும் தனி முதல் பேர் ஒளி சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும் தொல் பதம் தீர் பாழில் சுந்தரச் சோதிபுக்கு அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே.
பண்டை மறைகள் பரவான் உடல் என்னும் துண்ட மதியோன் துரியா தீதம் தன்னைக் கண்டு பரனும் அக் காரணோ பதிக்கே மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே.
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான் வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற வெளி ஆய சத்தி அவன் வடிவாமே.
மேருவி னோடே விரிகதிர் மண்டலம் ஆர நினையும் அரும் தவ யோகிக்குச் சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும் பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே.