பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கரும் தாள் கருடன் விசும்பு ஊடு இறப்பக் கரும் தாள் கயத்தில் கரும் பாம்பு நீங்கப் பெரும் தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே
கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல் அறிவு ஆண்மை மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால் தரு அலர் கேட்ட தனி உம்பர் ஆமே.
பிணங்கவும் வேண்டாம் பெரு நிலம் முற்றும் இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில் கணம் பதினெட்டும் கழல் அடி காண வணங்கு எழு நாடி அங்கு அன்பு உறல் ஆமே.
என்னிலும் என் உயிர் ஆய இறைவனைப் பொன்னிலும் மா மணி ஆய புனிதனை மின்னிய எவ்வுயிர் ஆய விகிர்தனை உன்னிலும் உன்னும் உறுவகை யாலே.
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும் வென்று ஐம் புலனும் விரைந்து பிணக்கு அறுத்து ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.
நுண் அறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண் அறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப் பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை விண் அறிவாளர் விரும்பு கின்றாரே.
விண்ணவ ராலும் அறிவறியான் தன்னைக் கண் உற உள்ளே கருதிடில் காலையில் எண் உற ஆக முப்போதும் இயற்றி நீ பண்ணிடில் தன்மை பரா பரன் ஆமே.
ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன் பின் தான் அருள் செய்த பேர் அருளாள வன் கன்றா மனத்தார் தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனை புகழானே.
போற்றி என்றேன் எந்தை பொன் ஆன சேவடி ஏற்றியேது என்றும் எறிமணி தான் அகக் காற்றின் விளக்கு அது காய மயக்கு உறும் ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே.
நேடிக் கொண்டு என் உள்ளே நேர் தரு நந்தியை ஊடுபுக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை கூடுபுக்கு ஏறல் உற்றேன் அவன் கோலம் கண் மூடிக் கண்டேன் உலகு ஏழும் கண்டேனே.
ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும் தேனும் இருக்கும் சிறுவரை ஒன்று கண்டு ஊனம் ஒன்று இன்றி உணர்வு செய்வார் கட்கு வானகம் செய்யும் மறவனும் ஆமே.
மா மதி ஆம் மதியாய் நின்ற மாதவர் தூய் மதி ஆகும் சுடர் பரம் ஆனந்தம் தா மதி ஆகச் சகம் உணச் சாந்தி புக்கு ஆம் மலம் அற்றார் அமைவு பெற்றாரே.
பத முத்தி மூன்றும் பழுது என்று கைவிட்டு இதம் உற்ற பாச இருளைத் துரந்து மதம் அற்று எனது யான் மாற்றி விட்டு ஆங்கே திதம் உற்றவர்கள் சிவ சித்தர் தாமே.
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீர் உடன் சுத்த ஆசுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதா சிவத் தன்மையர் தாமே.
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன் நிதித் தெண் திசையும் நிறைந்து நின்றாரே.