பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின் தொன்மை ஆம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப் பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல் நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம்.
தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த தேம் மலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் காமர் பொன் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு.
பெருமையில் செறி பேர் ஒலி பிறங்கலின் நிறைந்து திருமகட்கு வாழ் சேர்வு இடம் ஆதலின் யாவும் தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல் கரி, பரித் தொகை, மணி, துகில் சொரிவது ஆம் கலத்தால்.
நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக் கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும் ஆடி மண்டலம் போல்வது அவ் அணி கிளர் மூதூர்.
அந் நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி.
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள்.
உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னை அங்கானல் அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடைக்கு அழிந்து மணம் கொள் கொம் பரின் மருங்கு நின்று இழியல; மருளும்.
வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய.
அனையது ஆகிய அந் நுளைப்பாடியில் அமர்ந்து மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார்; புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும் வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர்.
ஆங்கு அவ்அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள் ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபடவு இயக்கிப் பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார்.
முட்டு இல் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும் நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால்.
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் ஏக நாயகர் தம் கழற்கு என விடும் இயல்பால் ஆகும் நாள்களில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே மேக நீர் படி வேலையின் பட விட்டு வந்தார்.
மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் பான்மை பற்றியும் வருந்திலர்; பட்ட மீன் ஒன்று மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார்.
சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்துக் கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச் சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார்.
ஆன நாள் ஒன்றில் அவ் ஒரு மீனும் அங்கு ஒழித்துத் தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால் மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலை ஆம் பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார்.
வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத் தாங்கு பேர் ஒளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப் பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார்.
என்று மற்று உள்ளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர் பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால் ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரித்தார்.
அகில லோகமும் பொருள் முதற்று ஆம் எனும் அளவில் புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த இகல் இல் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல் முகில் விசும்பு இடை அணைந்தர் பொழிந்தனர் முகைப்பூ.
பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை நஞ்சு வாள்மணி மிடற்று அவர் சிவலோகம் நண் அம் சிறப்பு உடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார்.
தம் மறம் புரி மரபினில் தகும் பெருந்தொண்டு மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி மும்மை ஆகிய புவனங்கள் முறைமையில் போற்றும் செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்.