பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக் கருதி, பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே, தீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய் கூத்தா! உன் சேவடி கூடும்வண்ணம் தோள் நோக்கம்!
என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டுகொண்டான்; கன்றால் விளவு எறிந்தான், பிரமன், காண்பு அரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன்; குணம் பரவி, துன்று ஆர் குழலினீர்! தோள் நோக்கம் ஆடாமோ!
பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க, செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம், விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு, அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக, கருணையினால் நிற்பானைப் போல, என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி, நல் பால் படுத்து என்னை, நாடு அறியத் தான் இங்ஙன், சொல் பாலது ஆனவா தோள் நோக்கம் ஆடாமோ!
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலா, பகலோன், புலன் ஆய மைந்தனோடு, எண் வகையாய்ப் புணர்ந்துநின்றான்; உலகு ஏழ் என, திசை பத்து என, தான் ஒருவனுமே பல ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!
புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம், தம் தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்க, சித்தம் சிவம் ஆக்கி, செய்தனவே தவம் ஆக்கும் அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ!
தீது இல்லை மாணி, சிவ கருமம் சிதைத்தானை, சாதியும் வேதியன், தாதை தனை, தாள் இரண்டும் சேதிப்ப, ஈசன் திருவருளால் தேவர் தொழ, பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்!
மானம் அழிந்தோம்; மதி மறந்தோம்; மங்கைநல்லீர்! வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம், ஆனந்தக் கூத்தன் அருள் பெறின், நாம் அவ்வணமே ஆனந்தம் ஆகி, நின்று ஆடாமோ தோள் நோக்கம்!
எண் உடை மூவர் இராக்கதர்கள், எரி பிழைத்து, கண் நுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதன் பின், எண் இலி இந்திரர், எத்தனையோ பிரமர்களும், மண்மிசை மால் பலர், மாண்டனர்; காண் தோள் நோக்கம்!
பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக் குறைய, தம் கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமே, சங்கரன், எம் பிரான், சக்கரம் மாற்கு அருளிய ஆறு, எங்கும் பரவி, நாம் தோள் நோக்கம் ஆடாமோ!
காமன் உடல்; உயிர், காலன்; பல், காய் கதிரோன்; நா மகள் நாசி; சிரம், பிரமன்; கரம், எரியை; சோமன் கலை; தலை தக்கனையும், எச்சனையும்; தூய்மைகள் செய்தவா தோள் நோக்கம் ஆடாமோ!
பிரமன், அரி, என்ற இருவரும், தம் பேதைமையால் பரமம், யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க, அரனார், அழல் உரு ஆய், அங்கே, அளவு இறந்து, பரம் ஆகி, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!
ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம், பாழுக்கு இறைத்தேன், பரம்பரனைப் பணியாதே; ஊழி முதல், சிந்தாத நல் மணி, வந்து, என் பிறவித் தாழைப் பறித்தவா தோள் நோக்கம் ஆடாமோ!