பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஐயாறு
வ.எண் பாடல்
1

“ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி!
ஆரமுதே!” என்றேன், நானே;
“கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள்
பூதப்பல் படையாய்!” என்றேன், நானே;
“பேர் ஆயிரம் உடையாய்!” என்றேன், நானே;
“பிறை சூடும் பிஞ்ஞகனே!” என்றேன், நானே;
“ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே!” என்று என்றே
நான் அரற்றி நைகின்றேனே!.

2

“தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா!
புராணனே!” என்றேன், நானே;
“மூவா மதிசூடி!” என்றேன், நானே; “முதல்வா!
முக்கண்ணனே!” என்றேன், நானே;
“ஏ ஆர் சிலையானே!” என்றேன், நானே;
இடும்பைக்கடல் நின்றும் ஏற வாங்கி,
“ஆவா!” என்று அருள்புரியும் ஐயாற(ன்)னே!”
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

3

“அம் சுண்ண வண்ணனே!” என்றேன், நானே;
“அடியார்கட்கு ஆர் அமுதே!” என்றேன், நானே;
“நஞ்சு அணி கண்டனே!” என்றேன், நானே;
“நாவலர்கள் நால்மறையே!” என்றேன், நானே;
“நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும்
அமுதமே!” என்றேன், நானே;
“அஞ்சாதே ஆள்வானே! ஐயாற(ன்)னே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

4

“தொல்லைத் தொடு கடலே!” என்றேன், நானே;
“துலங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே;
“எல்லை நிறைந்தானே!” என்றேன், நானே;
“ஏழ்நரம்பின் இன் இசையாய்!” என்றேன், நானே;
“அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி
அருள்செய்தாய்!” என்றேன், நானே;
“எல்லை ஆம் ஐயாறா!” என்றேன், நானே; என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

5

“இண்டைச் சடைமுடியாய்!” என்றேன், நானே;
“இருசுடர் வானத்தாய்!” என்றேன், நானே;
“தொண்டர் தொழப்படுவாய்!” என்றேன், நானே;
“துருத்தி நெய்த்தானத்தாய்!” என்றேன், நானே;
“கண்டம் கறுத்தானே!” என்றேன், நானே; “கனல்
ஆகும் கண்ணானே!” என்றேன், நானே;
“அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாற(ன்)னே!”
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

6

“பற்றார் புரம் எரித்தாய்!” என்றேன், நானே;
“பசுபதீ! பண்டரங்கா!” என்றேன், நானே;
“கற்றார்கள் நாவினாய்!” என்றேன், நானே; “கடு
விடை ஒன்று ஊர்தியாய்!” என்றேன், நானே;
“பற்று ஆனார் நெஞ்சு உளாய்!” என்றேன், நானே;
“பார்த்தற்கு அருள்செய்தாய்!” என்றேன், நானே;
“அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாற(ன்)னே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

7

“விண்ணோர் தலைவனே!” என்றேன், நானே;
“விளங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே;
“எண்ணார் எயில் எரித்தாய்!” என்றேன், நானே;
“ஏகம்பம் மேயானே!” என்றேன், நானே;
“பண் ஆர் மறை பாடி!” என்றேன், நானே;
“பசுபதீ! பால்நீற்றாய்!” என்றேன், நானே;
“அண்ணா! ஐயாறனே!” என்றேன், நானே; என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

8

“அவன்” என்று நான் உன்னை அஞ்சாதேனை
“அல்லல் அறுப்பானே!” என்றேன், நானே;
“சிவன்” என்று நான் உன்னை எல்லாம் சொல்ல,
“செல்வம் தருவானே!” என்றேன், நானே;
“பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று
பண்டைவினை அறுப்பாய்!” என்றேன், நானே;
“அவன்” என்றே, “ஆதியே! ஐயாற(ன்)னே!”என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!

9

“கச்சி ஏகம்பனே!” என்றேன், நானே; “கயிலாயா!
காரோணா!” என்றேன், நானே;
“நிச்சல் மணாளனே!” என்றேன், நானே; “நினைப்பார்
மனத்து உளாய்!” என்றேன், நானே;
“உச்சம் போது ஏறு ஏறீ!” என்றேன், நானே;
“உள்குவார் உள்ளத்தாய்!” என்றேன், நானே;
“அச்சம் பிணி தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்று
என்றே நான் அரற்றி நைகின்றேனே!.

10

“வில் ஆடி வேடனே!” என்றேன், நானே; “வெண்நீறு
மெய்க்கு அணிந்தாய்!” என்றேன், நானே;
“சொல் ஆய சூழலாய்!” என்றேன், நானே; “சுலா
ஆய தொன்னெறியே!” என்றேன், நானே;
“எல்லாம் ஆய் என் உயிரே!” என்றேன், நானே;
“இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்!” என்றேன், நானே;
“அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்றுஎன்றே
நான் அரற்றி நைகின்றேனே!.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஐயாறு
வ.எண் பாடல்
1

ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு
ஒருவனாய் நின்றாய், நீயே;
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான்
மருகனாய் நின்றாய், நீயே;
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி
என்மேல் வைத்தாய், நீயே;
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு
அகலாத செம்பொன்சோதீ!.

2

நோக்க(அ)ரிய திருமேனி உடையாய், நீயே; நோவாமே
நோக்கு அருள வல்லாய், நீயே;
காப்ப(அ)ரிய ஐம்புலனும் காத்தாய், நீயே; காமனையும்
கண் அழலால் காய்ந்தாய், நீயே;
ஆர்ப்ப(அ)ரிய மா நாகம் ஆர்த்தாய், நீயே; அடியான்
என்று அடி என்மேல் வைத்தாய், நீயே;
தீர்ப்ப (அ)ரிய வல்வினை நோய் தீர்ப்பாய், நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ!.

3

கனத்து அகத்துக் கடுஞ் சுடர் ஆய் நின்றாய், நீயே;
கடல், வரை, வான், ஆகாயம், ஆனாய், நீயே;
தனத்து அகத்துத் தலை கலனாக் கொண்டாய், நீயே;
சார்ந்தாரைத் தகைந்து ஆள வல்லாய், நீயே;
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய், நீயே;
மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
சினத்து இருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு
அகலாத செம்பொன்சோதீ!.

4

வான் உற்ற மா மலைகள் ஆனாய், நீயே; வடகயிலை
மன்னி இருந்தாய், நீயே;
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய், நீயே; ஒளி
மதியோடு, அரவு, புனல், வைத்தாய், நீயே;
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய், நீயே; “அடியான்”
என்று அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேன் உற்ற சொல் மடவாள் பங்கன், நீயே திரு
ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

5

பெண் ஆண் பிறப்பு இலியாய் நின்றாய், நீயே;
பெரியார்கட்கு எல்லாம் பெரியாய், நீயே;
உண்ணா அருநஞ்சம் உண்டாய், நீயே; ஊழி
முதல்வனாய் நின்றாய், நீயே;
கண் ஆய் உலகு எலாம் காத்தாய், நீயே;
கழல்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் ஆர் மழுவாள் படையாய், நீயே திரு ஐயாறு
அகலாத செம்பொன்சோதீ!.

6

உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய், நீயே;
உற்றவர்க்கு ஓர் சுற்றம் ஆய் நின்றாய், நீயே;
கற்றிருந்த கலைஞானம் ஆனாய், நீயே; கற்றவர்க்கு
ஓர் கற்பகம் ஆய் நின்றாய், நீயே;
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய், நீயே;
பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;
செற்றிருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு
அகலாத செம்பொன்சோதீ!.

7

எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி
இருந்தாய், நீயே;
நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர்
விளக்கு ஆய் நின்றாய், நீயே;
பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச்
சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு
அகலாத செம்பொன்சோதீ!.

8

ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு இல்
பெருமை உடையாய், நீயே;
பூவினில் நாற்றம் ஆய் நின்றாய், நீயே; போர்க்
கோலம் கொண்டு எயில் எய்தாய், நீயே;
நாவில் நடு உரை ஆய் நின்றாய், நீயே; நண்ணி அடி
என்மேல் வைத்தாய், நீயே;
தேவர் அறியாத தேவன், நீயே திரு ஐயாறு
அகலாத செம்பொன்சோதீ!.

9

எண் திசைக்கும் ஒண்சுடர் ஆய் நின்றாய், நீயே;
ஏகம்பம் மேய இறைவன், நீயே;
வண்டு இசைக்கும் நறுங்கொன்றைத் தாராய், நீயே;
வாரா உலகு அருள வல்லாய், நீயே;
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய், நீயே;
தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய், நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

10

விண்டார் புரம் மூன்றும் எய்தாய், நீயே;
விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய், நீயே;
கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய், நீயே;
காலங்கள் ஊழி ஆய் நின்றாய், நீயே;
தொண்டு ஆய் அடியேனை ஆண்டாய், நீயே; தூ
மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய், நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

11

ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம் தேர்
ஊர வல்லாய், நீயே;
பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத்து
இறுத்தாய், நீயே;
ஊரும் புரம் மூன்றும் அட்டாய், நீயே; ஒண்
தாமரையானும் மாலும் கூடித்
தேரும் அடி என்மேல் வைத்தாய், நீயே திரு
ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.