பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / கேடு கண்டு இரங்கல்
வ.எண் பாடல்
1

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார்
முற்று ஒளிதீயின் முனிகின்ற வாறே.

2

போது சடக் எனப் போகின்றது கண்டும்
வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது
நீதி உள்ளே நின்று நின் மலன் தாள் பணிந்து
ஆதியை அன்பில் அறிய கில்லார்களே.

3

கடன் கொண்டு நெல் குத்துக் கையரை ஊட்டி
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவர்
தடம் கொண்ட சாரல் தழல் முருடு ஏறி
இடம் கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.

4

விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன
பரம் தன்னை ஓராப் பழி மொழி யாளர்
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே.

5

நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும்
என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும்
அன்றி உலகம் அது இது தேவென்று
குன்று கையாலே குறைப் பட்ட வாறே.

6

இன்பத்து உளே பிறந்து இன்பத்து உளே வளர்ந்து
இன்பத்து உளே நினைக்கின்ற இது மறந்து
துன்பத்து உளே சிலர் சோ றொடு கூறை என்று
துன்பத்து உளே நின்று தூங்கு கின்றார்களே.

7

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியது ஓர் பேர் இழந்தாரே

8

ஆர்வ மனமும் அளவு இல் இளமையும்
ஈரமும் நல்ல என்று இன்பு உறு காலத்துத்
தீர வருவது ஓர் காமத் தொழில் நின்று
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே.

9

இப் பரிசே இள ஞாயிறு போல் உரு
அப் பரிசு அங்கியின் உள் உறை அம்மானை
இப் பரிசே கமலத்து உறை ஈசனை
மெய்ப் பரிசே வினவாது இருந்தோமே.

10

கூட கில்லார் குரு வைத்த குறி கண்டு
நாட கில்லார் நயம் பேசித் திரிவர்கள்
பாட கில்லார் அவன் செய்த பரிசு அறிந்து
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே.

11

நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர்
நஞ்சு எம்பிரான் என்று நாதனை நாள் தொறும்
துஞ்சும் அளவும் தொழுமின் தொழா விடில்
அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே.

12

மிருக மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர் செய் அன்பு வைத்து உன்னாதது இல்லை
பருகுவரோடு அவர் பார்ப்பயன் கொள்வர்
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே.

13

நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனைச்
சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை
ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று
நாதியே வைத்து அது நாடுகின்றேனே.

14

இரும் தேன் மலர் அளைந்து இன்பு உற வண்டு
பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வரும் தேன் நுகராது வாய்புகு தேனை
அரும் தேனை யாரும் அறிய கிலாரே.

15

கருத்து அறியாது கழிந்தன காலம்
அருத்தி உள்ளான் அமரா பதி நாதன்
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம்
வருத்தி நில்லாது வழுக்கு கின்றாரே.

16

குதித்து ஓடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே.

17

கரை அருகு ஆறாக் கழனி விளைந்த
திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும்
வரை அருகு ஊறிய மாதவம் நோக்கின்
நரை உருவாச் செல்லும் நாள் இலவாமே.

18

வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து
இரவு அறிவானை எழும் சுடர்ச் சோதியை
அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று
விரவு அறியாமலே மேல் வைத்த வாறே.