பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / இதோபதேசம்
வ.எண் பாடல்
1

மறந்து ஒழி மண் மிசை மன்னாப் பிறவி
இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்து அலமந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவ நெறி சிந்தை செய்யீரே.

2

செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை
நல்ல வரன் நெறி நாடுமின் நீரே.

3

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலை பெற நீர் நினைந்து உய்மினே.

4

போற்றி செயம் தண் கயிலைப் பொருப்பனை
நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனைக்
காற்று இசைக்கும் கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்று உதைத்தான் தன்னைக் கூறி நின்று உய்மின்னே.

5

இக் காயம் நீக்கி இனி ஒரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம் வழி நாடுமின்
எக்காலத்து இவ் உடல் வந்து எமக்கு ஆனது என்
அக் காலம் உன்ன அருள் பெறலாமே.

6

போகின்ற ஆறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப் பொருள் அக்கரை ஆகுமே.

7

பறக்கின்ற ஒன்று பயன் உற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவ கதி பின்னைப்
பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே.

8

கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனைப்
பாடி உளே நின்று பாதம் பணிமின்கள்
ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசு அது ஆமே.

9

விடுகின்ற சீவனார் மேல் எழும் போது
நடு நின்று நாடு மின் நாதன் தன் பாதம்
கெடுகின்ற வல் வினை கேடுஇல் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.

10

இன்பு உறுவீர் அறிந்தே எம் இறைவனை
அன்பு உறுவீர் தவம் செய்யும் மெய் ஞானத்துப்
பண்பு உறுவீர் பிறவித் தொழிலே நின்று
துன்பு உறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே

11

மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு
மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு
மேற் கொள்ளல் ஆவது ஓர் மெய்ந் நெறி ஒன்று உண்டு
மேற் கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே.

12

சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன்
பேர்ந்து அவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்து அவர்க்கே குரைகழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்று உணர் வாரே.

13

முத்தியை ஞானத்தை முத் தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்த் தலைப் பால் போல் நிமலனும் அங்கு உளன்
அத் தரு சோதி அது விரும்பாரே.

14

நியமத்தன் ஆகிய நின் மலன் வைத்த
உலகம் எத்தனை என்று ஒருவரும் தேறார்
பவமத்திலே வந்து பாய்கின்றது அல்லால்
சிவம் அத்தை ஒன்றும் தெளிய கில்லாரே.

15

இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சு ஒத்த காலத்துத் தூய் மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா என நின்னை
நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே.

16

பஞ்சமும் ஆம் புவி சற்குரு பால் முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர் தம்மை
அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும்
செஞ்ச நிற்போரைத் தெரிசிக்கச் சித்தியே.

17

சிவனை வழி பட்டார் எண் இலாத் தேவர்
அவனை வழி பட்டு அங்கு ஆம் ஆறு ஒன்று இல்லை
அவனை வழி பட்டு அங்கு ஆம் ஆறு காட்டும்
குருவை வழி படில் கூடலும் ஆமே.

18

நரரும் சுரரும் பசு பாசம் நண்ணிக்
கருங் களாலே கழிதலில் கண்டு
குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால்
பரம் என்றல் அன்றிப் பகர் ஒன்றும் இன்றே.

19

ஆட் கொண்டவர் தனிநாயகன் அன்பு உற
மேற் கொண்டவர் வினை போய் அற நாள் தொறும்
நீர்க்கின்ற செம் சடை நீளன் உருவத்தின்
மேல் கொண்ட வாறு அலை வீவித்து உளானே.