பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / ஞானகுரு தரிசனம்
வ.எண் பாடல்
1

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவ பதம் மேலாய் அளித்திடும்
பேறு ஆக ஆனந்தம் பேணும் பெருகவே.

2

துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேச ஒண்ணாதே.

3

ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன்
காயன நந்தியைக் காண என் கண் பெற்றேன்
சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேனே.

4

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடு மா போல்
குருவின் உருவம் குறித்த அப்போதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே.

5

தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
ஆன்ற அறிவும் அறிநனவு ஆதிகள்
மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற
ஊன்றிய நந்தி உயர் மோனத் தானே.

6

சந்திர பூமிக்கு உடன் புருவத்து இடைக்
கந்த மலரில் இரண்டு இதழ்க் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம் குரு பற்றே.

7

மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ
நிலம் புகுந்தான் நெடுவான் நிலம் தாங்கிச்
சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க
வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாமே.

8

தான் ஆன வண்ணமும் கோசமும் சார் தரும்
தான் ஆம் பறவை வனம் எனத் தக்கன
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில்
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே.

9

மருவிப் பிரிவு அறியா எங்கள் மா நந்தி
உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு
அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே.

10

தலைப் படலாம் எங்கள் தத்துவன் தன்னைப்
பலப் படு பாசம் அறுத்து அறுத்து இட்டு
நிலைப் பெற நாடி நினைப்பு அற உள்கில்
தலைப் படல் ஆகும் தருமமும் தானே.

11

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளை மலர் சோதியினானைத்
தினைப் பிளந்து அன்ன சிறுமையர் ஏனும்
கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே.

12

தலைப்படும் காலத்துத் தத்துவன் தன்னை
விலக்கு உறின் மேலை விதி என்றும் கொள்க
அனைத்து உலகாய் நின்ற ஆதிப் பிரானை
நினைப்பு உறுவார் பத்தி நேடிக் கொள்வாரே.

13

நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி
நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடித்
திகழ்வு ஒழிந்தார் தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ் வழி காட்டிப் புகுந்து நின்றானே.

14

வந்த மரகத மாணிக்க ரேகை போல்
சந்திடும் மா மொழிச் சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே.

15

உண்ணும் வாயும் உடலும் உயிரும் ஆய்க்
கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது
மண்ணுநீர் அனல் காலொடு வானும் ஆய்
விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே.

16

பரசு பதி என்று பார் முழுது எல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதி செய்து பின் ஆம் அடியார்க்கு
உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே.

17

அம்பர நாதன் அகல் இட நீள் பொழில்
தம்பரம் அல்லது தாம் அறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெருமான் அருள் பெற்று இருந்தாரே.

18

கோ வணங்கும் படி கோவணம் ஆகிப் பின்
நா வணங்கும் படி நந்தி அருள் செய்தான்
தே வணங்கோம் இனிச் சித்தம் தெளிந்தனம்
போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே.