பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூர்க்க நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

மன்னிப் பெருகும் பெருந்தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும்
நல் நித்திலம் வெண் திரைப்பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி
அன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கின் இடை
மின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவில் காடு வேற்காடு.

2

செம் பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக் கற்றை
நம்பர்க்கு, உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு
இம்பர்த் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும்
தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தின் தலைமை சார்ந்து உள்ளார்.

3

கோது இல் மரபில் பிறந்துவளர்ந்து அறிவு கொண்ட நாள்தொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார்
காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்யக்கண்டு உண்ணும்
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார்.

4

தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவைஅமைத்து
மேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி அன்பு மிக
ஏயுமாறு நாள் தோறும் இனைய பணி செய்து இன்புற்றார்.

5

இன்ன செயலின் ஒழுகும்நாள் அடியார் மிகவும் எழுந்து அருள
முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன்
மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே
அன்னம் அளித்தே மேல் மேலும் ஆரா மனத்தர் ஆயினார்.

6

அங் கண் அவ்வூர் தமக்கு ஒருபற்று அடியார் தங்கட்கு அமுது ஆக்க
எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்துஅயர்வார்
தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூது ஆல்
பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மை இனில் பேவார்.

7

பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள்
உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து
கற்ற சூதால் நியதி ஆம் கருமம் முடித்தே கருதார் ஊர்
செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார்; வந்து சில நாளில்.

8

இருள் ஆரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப்
பொருள் ஆயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர்
அருளாகவே கொண்டு அங்கு அமுது செய்வித்து இன்பு உறுவார்.

9

முன் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப்
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச்
சொல் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நானிலத்தில்.

10

சூதினில் வென்று எய்து பொருள் துரிசு அற்ற நல் உணர்வில்
தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார்
காதல் உடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்தி
ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள்.

11

நாதன் தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்தோறும்
ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே
ஏதங்கள் போய் அகல இவ் உலகைவிட்டு அதன்பின்
பூதங்கள் இசை பாட ஆடுவார் புரம் புக்கார்.

12

வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள்
அல் ஆரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்
நல்லார் நல் சூதர்ஆம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச்
சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம்.