பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இடங்கழி நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

எழும் திரை மா கடல் ஆடை இரு நிலமா மகள் மார்பில்
அழுந்து பட எழுதும் இலைத் தொழில் தொய்யில் அணியினவாம்
செழும் தளிரின் புடை மறைந்த பெடை களிப்பத் தேமாவின்
கொழும் துணர் கோதிக் கொண்டு குயில் நாடு கோநாடு.

2

முருகுஉறு செங்கமல மதுமலர் துதைந்த மொய் அளிகள்
பருகுஉறு தெண் திரை வாவிப் பயில் பெடையோடு இரை அருந்தி
வருகுஉறு தண் துளி வாடை மறைய மாதவிச் சூழல்
குருகு உறங்கும் கோன் நாட்டுக் கொடி நகரம் கொடும்பாளூர்.

3

அந் நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து
மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பாக் கொங்கின்
பன்னு துலைப் பசும் பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த
பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர்.

4

இடம் கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார்;
அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடித்தொண்டின் நெறி அன்றி
முடங்கு நெறி கனவினிலும் முன்னாதார் எந்நாளும்
தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார்.

5

சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப
மை வளரும் திருமிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும்
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதிவழிமேல் மேல் விளங்க
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில்.

6

சங்கரன் தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார்
அங்கு ஒருவர், அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன்
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய்தொழில் முட்டப்
பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது.

7

அரசர் அவர் பண்டாரத்து அந்நாட்டின் நெல் கூட்டின்
நிரை செறிந்த புரிபலவாம் நிலைக் கொட்ட காரத்தில்
புரை செறி நல் இருளின் கண் புக்கு முகந்து எடுப்பவரை
முரசு எறி காவலர் கண்டு பிடித்து அரசன் முன் கொணர்ந்தார்.

8

மெய்த்தவரைக் கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும்
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட
இத் தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கிப்
பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார்.

9

நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றிக்
குறைவு இல் நிதிப் பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும்
பறை அறையப் பண்ணுவித்தார்; படைத்த நிதிப்பயன் கொள்வார்.

10

எண்ணிஇல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள
உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டித்
தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப
மண்ணில் அருள் புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார்.

11

மை தழையும் மணி மிடற்றார் வழித்தொண்டின் வழிபாட்டில்
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி,
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியாச்
செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம்.